பிரதமரின் செயற்பாடு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்

Report Print Thiru in அரசியல்

பிரதமரின் செயற்பாடு அனைத்து தலைவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம், வரலாற்றில் ஒரு பிரதம மந்திரி ஆணைக்குழுவில் சென்று சாட்சியமளிப்பது இதுவே முதல் தடவை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதான் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு வாக்களித்த மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப்பற்றி பலரும் விமர்சனம் செய்தார்கள். ஒரு சில ஊடகங்களும் அவருக்கு சேறு பூசும் விதத்தில் நடந்து கொண்டன.

ஆனால் எதனையும் பொருட்படுத்தாமல் தான் சரியாக அனைத்தையும் செய்திருக்கின்றேன் என்பதை நிரூபிக்கின்ற வகையில் அவர் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தமை அவருடைய நேர்மைக்கும் துணிச்சலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததுடன் அந்த செயற்பாடானது ஏனைய தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

எனவே கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளையோ அல்லது ஒரு அமைச்சரோ இவ்வாறு நடந்து கொண்டார்களா? என்பது கேள்விக்குறியே.

பேச்சளவில் மாத்திரம் அல்லாமல் செயற்பாட்டளவிலும் அதனை செய்து காட்டிய ஒரு தலைவராக அவரை நாம் பார்க்க முடியும்.

எமது அன்றைய பல நாடுகளில் ஊழல் மளிந்திருக்கின்ற ஒரு நிலையில் தான் மிகவும் நேர்மையானவர் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த அமைச்சை பொறுப்பேற்ற பின்பு நாட்டின் உயர்க் கல்வியை மேலோங்க செய்வதற்கு பல வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.

பொதுவாக வருடந்தோறும் 12,000 இற்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்வி வாயப்புகளுக்காக வெளிநாடு செல்கின்றார்கள்.

இதற்கான அந்நிய செலாவணி மீதான வரி ஆண்டுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது இதனை தவிர்க்க வேண்டியுள்ளது.

இந்த இடைவெளியை நிரப்பும் முகமாக பல தனியார்த் துறை கல்வி நிறுவகங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இது ஒரு வரவேற்க கூடிய விடயமாகும்.

மேலும் உயர் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று நாட்டில் உள்ளன. இதில், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், உளவியல், மேலாண்மை மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் 64 அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளை வழங்கும் 16க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளன.

இதில் NIBM, CINEC, SAITM, ICASL ஆகிய கல்வி நிறுவனங்களை குறிப்பாகக் கூறலாம்.

பொதுவாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக பல கோஷங்கள் எழுந்தவண்ணம் இருந்தாலும், அவற்றை பொறுமையாக அவதானித்து நாட்டின் வருங்கால சிறார்களின் உயர் கல்வி அபிவிருத்திற்கு அமைச்சர் எடுக்கும் முயற்சியை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

மேலும் சய்ட்டம் தொடர்பான சர்ச்சைக்கு சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட்டதை நான் வரவேற்கின்றேன்.அவர்களும் எங்களுடைய மாணவர்கள்.அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் நாம் அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதே போல அனைத்து மாணவர்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பும் எம்முடையதாகும். இந்த அமைச்சை பொறுத்த அளவில் எங்களுடைய மலையக பகுதிக்கு அதாவது நுவரெலியா பகுதிக்கு பேராதெனிய பழ்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படக்கூடிய பழ்கலைக்கழக வளாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாம் கடந்த பல வருடங்களாக குரல் கொடுத்து வருகின்றோம். அது மட்டுமல்லாமல் யாழ்ப்பாண பழ்கலைக்கழகத்தில் இந்து நாகரீகம் ஒரு பகுதியாக மாத்திரமே இருக்கின்றது.

அதனை ஒரு துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.