பாதுகாப்பு அமைச்சுக்கும் மன்னார் மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

Report Print Dias Dias in அரசியல்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுக்கும், மன்னார் மாவட்டத்திலிருந்து வருகைத் தந்திருந்த முக்கியஸ்தர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, செபஸ்டியர் பேராலய பங்குத்தந்தை பெப்பி சோசை, மன்னார் மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவர் கெனடி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் - தள்ளாடி பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் இராணுவம் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிப்பதாகவும், முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இதுவரை சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும், மன்னார் மாவட்ட பொது மக்களின் காணிகளில் படையினர் இருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அழுத்தமாக கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன,

வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் முடிவடைந்த பின்னர் டிசம்பர் மாதம் மன்னாருக்கு நேரடியாக வந்து பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார்.