வடக்கு முதலமைச்சர் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்!

Report Print Samy in அரசியல்

அடுத்த கட்டத் தலைமையை உருவாக்குவதற்குத் தமிழர்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இணைத்தலைவர் பதவியை வகிக்கும் தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வைத்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இன்றைய தலைவர்கள் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த காமராசர் பாணியில் அரசியலில் பின்னால் ஒதுங்கி நின்று தமிழரின்அரசியல் இயந்திரத்தை இயக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

படிக்காத மேதையென அடையாளப்படுத்தப்பட்ட காமராசர், தமது நேர்மையாலும், கடுமையான உழைப்பினாலும் படிப்படியாக அரசியலில் உயர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவியைச் சிறப்பாக வகித்தவர்.

தமிழ் நாட்டின் சின்னஞ்சிறு கிராமங்கள் தோறும் பாடசாலைகளை நிறுவி ஏழை மாணவர்களின் கல்விக் கண்களைத் திறந்தவர்.

இவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்த போது தமது பெயரிலான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினார்.

இதன் மூலமாக வயது முதிந்த மூத்த அரசியல் வாதிகள் தாம் வகித்த பதவிகளைத் துறந்து கட்சிப் பணிகளை ஆற்றினார்கள்.

தற்போது வடக்கு முதலமைச்சரும் காமராசரது அந்தப் பாணியை மனதில் வைத்தே மேற்கண்டவாறு கூறியுள்ளார் எனக் கொள்ளலாம்.

வடக்கு முதலமைச்சரும் வயது முதிர்ந்த ஒருவர் தான். ஆகவே காமராசரின் பாணியில் அவர் தமது பதவியைத் துறந்து விட்டு, கூட்டமைப்பின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு உழைக்க வேண்டும்.

அவர் அவ்வாறு நடந்து கொண்டால் மற்றவர்களும் அவரைப் பின்பற்றி நடப்பார்கள். அவருக்கு மதிப்பும் மரியாதையும் வழங்குவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி்ன் தலைவர் என்ற வகையில் இரா. சம்பந்தன் தமிழர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.

உயர்ந்த கல்வி அறிவும், சிறந்த அரசியல் அனுபவமும் கொண்ட அவர் தமது அரசியல் கடமைகளைச் செவ்வனே ஆற்றி வருகின்றார்.

தந்தை செல்வா உயிருடன் இருந்த போதே அமிர்தலிங்கம் போன்ற அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாகி விட்டனர்.

இதனால் செல்வாவின் மறைவுக்குப் பின்னர் அவரது வெற்றிடத்தை நிரப்புவதில் சிரமம் ஏற்படவில்லை.

தற்போதைய நிலையில் சம்பந்தனுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற தகுதி மாவை சேனாதிராசாவுக்கு மட்டுமே உள்ளது.

தனது இளவயதில் இருந்தே தமிழரசுக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்த அவர், தியாக வரலாற்றுக்கும் சொந்தக்காரர்.

ஆனால் அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு காரணமாக இன்று மாவையை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவமே நிலைத்து நிற்கக்கூடியது. மக்கள் தான் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

அதை விடுத்து நானே தலைவன் எனக் கூறிக் கொண்டு புறப்படுபவர்களை மக்கள் நிராகரிக்கவே செய்வார்கள்.

அரசியலுக்குப் புதியவர்கள் கருத்துக்களை வௌியிடும் போது அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

வடக்குத் தமிழர்கள் தமது அரசியல் தலைமை சுட்டிக்காட்டிய ஒரே காரணத்துக்காகவே விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் அமர்த்தினர்.

அந்த மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் முதலமைச்சர் நடந்து கொள்ளக் கூடாது.

தற்போது கூட்டமைப்புக்கு எதிரான எதிரணியை அமைத்துக் கொண்டவர்கள் இனிமேல் தான் அதற்கொரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எதிரணியில் பல தரப்பட்டவர்கள் அங்கம் வகிப்பதால் தலைவரைத் தெரிவு செய்வதில் குழப்பங்களும் இடம்பெறக் கூடும்.

இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு விக்னேஸ்வரன் பக்கமும் அவர்களின் பார்வை திரும்பக் கூடும். இதற்கு இணங்கினால் மன்னிக்க முடியாததொரு துரோகியாகவே முதலமைச்சர் கணிக்கப்படுவார்.

இதே வேளை புதிய கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வழங்கியதால் அதற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பேரவையின் அடிப்படைக் கொள்கையான அரசியலில் ஈடுபடாமை என்ற நிலைப்பாட்டை உதாசீனம் செய்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பேரவையின் தேர்தல் நடவடிக்கைக்கு அதன் இணைத்தலைவர்கள் இருவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உண்மையைச் சொல்லப்போனால், இது கூட்டமைப்புக்கு எதிரான காரியமல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது புரிந்து கொண்டிருப்பார்கள்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் வழக்கம் போன்று கூட்டமைப்புக்கே வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் முன்னர் போலன்றி தகுதியானவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது அதன் தலையாய கடமையாகும்.

அத்துடன் எதிரணியின் தவறான பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் வியூகங்களும் வகுத்துச் செயற்படுத்தப்படல் வேண்டும்.

ஒரு மனிதனின் உடலில் தலை தான் முதன்மையான உறுப்பாகும். இதைப்போன்று தான் எந்தவொரு அமைப்புக்கும் தலைமைத்துவம் என்பது முதன்மையானது.

ஆனால் கூட்டமைப்புக்கு எதிரான எதிரணிக்குத் தலைமைத்துவம் இல்லாமை அதன் செயற்பாடுகளுக்குப் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் எதுவும் கிடையாது.

newuthayan