பிரதமருக்கு ஆதரவாக வந்த அமைச்சர்கள்! சுமந்திரன் எம்.பியால் சர்ச்சை

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகிய போது அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆணைக்குழு வளாகத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.

இதன்படி, அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், கபீர் ஹாசிம், மனோ கணேசன், ரிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜ்புர் ரஹ்மான், எம்.ஏ.சுமந்திரன், வடிவேல் சுரேஸ் உள்ளிட்டவர்கள் வருகைத்தந்திருந்தனர்.

இவர்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மத்திய வங்கியின் ஊழியரான எஸ். பதுமநாபன் சார்பில் ஆணைக்குழுவில் விசேட வாதம் ஒன்றை முன்வைத்தார்.

இந்நிலையில், எஸ்.பதுமநாபன் சார்பில் சாட்சியங்களை நெறிப்படுத்த தான் எழுத்து மூலம் அனுமதி கோரியும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என எம்.ஏ.சுமந்திரன் ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவருக்கு எதிராக சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசாங்கத்தின் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் எட்டாவது நாடாளுமன்ற கோப் குழுவில் அங்கத்தவர் என்ற வகையில், அவருக்கு இந்த விவகாரம் தொடர்பில் ஆஜராக முடியாது என குறிப்பிட்ட சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா, அதனை தாம் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரன் எம்.ஏ.சுமந்திரன் ஆணைக்குழுவில் ஆஜரான விடயம் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.