பிணைமுறி மோசடியாளர்கள் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு?

Report Print Aasim in அரசியல்

பிணைமுறி மோசடியாளர்களைத் தப்புவிக்கும் வகையில் அந்நியச் செலாவணி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மருதானை சமூக மற்றும் அமைதிக்கான கேந்திர மையத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அக்கட்சியின் முக்கியஸ்தர் புபுது ஜாகொட மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த செலாவணிக் கட்டுப்பாட்டு சட்டம் அண்மையில் ரத்துச் செய்யப்பட்டு அதற்குப் பதிலாக வெளிநாட்டு பணச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிவிசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் கடந்த ஜூனில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

இச்சட்டமூலம் மோசடிக்காரர்களுக்கு வாய்ப்பான சட்டமூலமாகும்.

அத்துடன் இச்சட்டத்தைப் பயன்படுத்தி மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியாளர்களும் எதுவித தண்டனைகளும் இன்றி தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது என்றும் புபுது ஜாகொட தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.