பிரதமரின் புதிய இராஜதந்திர அணுகுமுறை!

Report Print Samy in அரசியல்

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரச உயர் மட்டத்தினருடனும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பல்வேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

இதில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிரதமர் மோடியுடன் இடம்பெற்ற பகல் போஷன விருந்துபசார வைபவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பெற்றிருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்துவதாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்துக்காக பூரண ஒத்துழைப்பை வழங்க இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருக்கிறார்.

கல்வித்துறையை முற்றுமுழுதாக டிஜிட்டில் மயமாக்குவதற்கான சகல ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா உடன்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மடி கணனிகளை பெற்றுக்கொடுப்பதற்குரிய வேலைத்திட்டத்தை இந்தியா சாதகமாக பரிசீலிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு இந்தியாவின் உயர்மட்ட தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

உண்மையிலேயே அண்டை நாடான இந்தியா இலங்கை தொடர்பில் எப்போதுமே சாதகமான போக்கையே கடைப்பிடித்து வரும் ஒரு நாடாகும்.

எந்த ஆட்சியாக இருப்பினும் இரு நாடுகளும் நல்லுறவைப் பேணுவதில் எப்போதும் கரிசணை காட்டியே வந்துள்ளன.

இரு நாடுகளுக்குமிடையே சில சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ளப்படுவதில் கூடிய அக்கறை காட்டி வந்துள்ளன.

இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற போரைக்கூட முடிவுக்குக்கொண்டு வரும் விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் மிக ஆரோக்கியமானதாகவே காணப்பட்டது.

இந்தியாவில் எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வருகின்ற போதிலும் அவை இலங்கை விடயத்தில் சாதகமான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளன.

அந்த வழியில் மோடி அரசும் இலங்கை விடயத்தில் தாராளப் போக்கை வெளிப்படுத்தி வருகின்றது.

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்தது முதல் இலங்கை அண்டை நாடுகளுடனும், ஒத்துழைப்பு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதில் கூடுதல் அக்கறை காட்டி வந்துள்ளது.

கடந்த ஆட்சியில் சீனா இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றத்துக்கு தாராள மனதுடன் முதலீடு செய்து வந்தது. இது இந்தியாவுக்கு அன்று கடுப்பை ஏற்படுத்தி இருந்தது.

மஹிந்த ஆட்சியில் மறைமுகமாக இந்தியா ஓரங்கட்டப்பட்டு வந்ததை இந்தியா நன்கறிந்திருந்த நிலையிலும் தனது வெறுப்பை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இந்த நிலையிலேயே 2015 ஜனாதிபதி தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் இந்தியா அதன் இராஜதந்திரச் செயற்பாடுகளை மிக சூசகமான முறையில் கையாண்டது.

மஹிந்தவின் தோல்விக்கு இந்தியாவின் இராஜதந்திரமும் ஒருவகையில் பங்களிப்புச் செய்தமை மறைமுகமான உண்மையாகும்.

நல்லாட்சியில் இந்தியாவின் நெருக்கமான உறவு உச்ச நிலை யில் பேணப்பட்டு வருகின்றது. எனினும் சீனாவையோ வேறு மேற்குலக நாடுகளையோ புறந்தள்ளவில்லை.

இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கு செவிமடுத்துச் செயற்படுவது போன்று சீனாவின் எதிர்பார்ப்புகளுக்கும் இலங்கை செவிசாய்க்கத் தவறவில்லை.

அண்டை நாடுகளையும், வேறு நெருக்கமான நாடுகளையும் புறமொதுக்காமல் அவற்றுடனான நல்லுறவைப் பேணிக்கொள்வதில் இலங்கை அதன் சாமர்த்திய போக்கில் வெற்றி கண்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தனது இந்திய விஜயத்தை முடித்துக் கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதியை சந்தித்த வேளையில் இலங்கை - இந்திய உறவு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது எந்த வெளிநாட்டுக்கும் பங்கமில்லாத வகையில் இருப்பதை அரசு உறுதிப்படுத்துவதாகவே இக்கருத்து அமையப்பெற்றுள்ளது.

கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ச சீனாவை தூக்கிப்பிடித்த கண்மூடித்தனமாகச் செயற்பட்டது போன்று நல்லாட்சி அரசு செயற்பட முனையவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜதந்திர அணுகுமுறையின் மூலம் உலக நாடுகளின் பேராதரவைப் பெற்று வருகிறார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இறைமைக்குப் பாதகமில்லாத வகையில் எவர்களின் உதவியையும், ஒத்துழைப்பையும் பெற முடியுமோ அந்தப் பாதையிலேயே ரணிலின் பயணம் அமைந்துள்ளது.

பிரதமரின் இம்முறை இந்திய விஜயம் கூட இரு நாடுகளின் உறவுக்கும், இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கும் பலம் சேர்க்கும் விஜயமாகவே அமைந்து காணப்படுவதாக புத்திஜீவிகளும், இராஜதந்திரிகளும் கருதுகின்றனர்.

இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வினூடாக பல சமூக, பொருளாதார வெற்றிகளை இலங்கை ஈட்டிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இலங்கை இந்திய பொருளாதார அபிவிருத்தித் தொடர்புகளைப் பலப்படுத்தி அதனூடாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றத்துக்கு பயனுறுதி பெறக்கூடியதாக மாற்றிக்கொள்ளும் புதிய அணுகுமுறையை பிரதமர் ரணில் தனது இந்திய விஜயத்தின் மூலம் வெற்றி கொண்டிருக்கிறார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

thinakaran.lk