எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கைதுசெய்ய முயற்சி: மகிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த சில தினங்களில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கைதுசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யும் திட்டங்களும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றிரவு நடந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு தடுத்துள்ளதாக பேசப்படுகிறது.

ஜனாதிபதியை அண்மையில் தொடர்பு கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்ய திட்டமிட்டுள்ளமை குறித்து கூறியுள்ளார்.

இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை தொடர்புக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டாம் என கூறியதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை சிறைச்சாலையில் 29 கைதிகள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரே நேரடியாக உத்தரவிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், முக்கிய சாட்சியங்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், கோத்தபாயவின் பெற்றோரான டி.ஏ.ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க அரச பணத்தை செலவிட்டமை தொடர்பான குற்றச்சாட்டும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக அவரை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தயாராகி வந்துள்ளனர்.

இது குறித்த தகவல் முன்கூட்டியே ராஜபக்ச குடும்பத்தினருக்கு ரகசிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இந்த தகவலை ஊடகங்களில் கசிய விட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.