சுதந்திரக்கட்சியின் இரண்டு அணிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் மஹிந்த தரப்பினர் தனித்துப் போட்டியிடும் நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக சுதந்திரக் கட்சியின் மைத்திரி - மஹிந்த தரப்பை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையிலும் எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வசதியாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் பொதுஜன பெரமுண கட்சி, தமது கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுண கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளர்களை தெரிவு செய்யும் வேட்பாளர் தேர்வு நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பவித்திரா வன்னியாரச்சி மற்றும் ரமேஷ் பதிரண ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர் நேர்முகத் தேர்வை நடத்தியிருந்தனர்.
ஹம்பாந்தோட்டையின் பத்து பிரதேச சபைகள் மற்றும் ஹம்பாந்தோட்டை, தங்காலை நகர சபைகளுக்கான வேட்பாளர் தேர்வு இதன்போது நடைபெற்றது.
கடந்த தேர்தல்களில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் மற்றும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பலரும் இம்முறை பொதுஜன பெரமுணவில் போட்டியிடுவதற்காக இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.