மகிந்தவும் சில சிங்கள அமைப்புக்களும் மக்களை தூண்டிவிட்டு குழப்புகின்றனர்! இரா.சம்பந்தன்

Report Print Nesan Nesan in அரசியல்

மகிந்த ராஜபக்சவும் சில சிங்கள அமைப்புக்களும், சிங்கள மக்களை தூண்டிவிட்டு துவேசங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், புதிய அரசமைப்பு சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் இன்றைய தினம்(25) இடம்பெற்றது.

இதில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ் மக்களுக்கு ஏற்பில்லாத எந்தத் தீர்வுத்திட்டத்தையும் கூட்டமைப்பு ஏற்காது என்றும் இதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

மகிந்தவும் சில சிங்கள அமைப்புக்களும், இந்த இடைக்கால அறிக்கையில் மறைமுகமான சமஷ்டித் தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட இருப்பதுடன், பின்னர் நாடும் பிரிக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு சிங்கள மக்களை தூண்டிவிட்டு துவேசங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

இதேபோன்றுதான் தமிழர்களை குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டினாலும், கடும் முயற்சியின் பயனாலும், 13ஆவது சீர்திருத்தம் உருவாக்கப்பட்டது.

மாவட்ட சபையைப் பெற தத்தளித்த எமக்கு வட, கிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

ஆனால், தமிழ்மக்களுக்கான சரியான தீர்வாக அமையவில்லை, இதனால் 13ஆவது சீர்திருத்தத்தில் பல முன்னேற்றங்கள் அடையவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். அது பின்னர் நிறைவேறாமல் போய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா இடதுசாரி கட்சிகளின் உதவியுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று முதலாவது குடியரசு அரசியல் சாசனத்தினை உருவாக்கினார்.

1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சி அதிகாரத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக கண்ணன் அமிர்தலிங்கம் இருந்தார். அப்போது இந்த நாட்டிலே ஒற்றையாட்சி முறைதான் காணப்பட்டது.

இதன் பின்னர், 1983ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவும், ராஜீவ் காந்தியின் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் 13ஆவது திருத்த சாசனம் அன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.

அதாவது, வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் ஒன்றாக இணைக்கப்பட்டு வட, கிழக்கு மாகாணங்களாக இணைக்கப்பட்டது.

இந்த இணைப்பிற்கு போதிய உறுதிப்பாடு இருக்கவில்லை. கனிசமான முன்னேற்றம் மாத்திரமே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, அந்த காலகட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலில் போட்டியிடவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் அண்ணன் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், (சம்பந்தன்) நாங்கள் மூவரும் ஒரு கடிதத்தினை ராஜீவ் காந்திக்கு அனுப்பியிருந்தோம்.

நாங்கள் அனைவரும் அவரை சந்தித்து 13ஆவது திருத்த சாசனம் தொடர்பாக 4 நாட்களாக தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.

அந்த நேரத்தில் 13ஆவது சாசனத்திற்கான 12 கருமங்களை அன்றிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஏற்றிருந்தார்.

அதன் பின்னர் தமிழீழ விடுதலை புலிகளுக்கும், இந்தியப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட போர் காரணமாக அந்த நடவடிக்கை இடை நடுவே கைவிடப்பட்டது.

ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமையினால் அது நிறைவேற்றப்படவில்லை.

2012ஆம் ஆண்டு ரணில் பிரதமராக இருந்த காலத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒஸ்லோ பிரகடனம் வெளிவந்தது.

இலங்கை அரசு ஏற்றுக்கொண்டபோதும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் தமிழ் பேசும் மக்கள் இணைந்து மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றி இருக்கின்றோம்.

அரசாங்கத்தில் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் இருப்பதுடன், பெரும்பான்மைக்கட்சிகள் இரண்டுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேறு சில கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றினால் அது முன்னேற்றகரமானதாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இதனை குழப்பும் நோக்கில் சில தலைமைகள் செயற்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவேண்டுமானால் புதிய அரசியல் சாசனம் தேவை என்பதனை உணராமல் செயற்படக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் - குமார்

Latest Offers