விரைவில் எட்கா: ரணில் உறுதி

Report Print Rakesh in அரசியல்

இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்கு தடையாகவுள்ள காரணிகள் சரிசெய்யப்பட்டு வெகுவிரைவிலேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடு திரும்புவதற்கு முன்னர் புதுடில்லியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டவர்களை எனது பயணத்தின்போது சந்தித்துப் பேச்சு நடத்தினேன்.

இலங்கைக்கும், இந்தியாவிற்குமிடையிலுள்ள உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலேயே மேற்படி அனைத்து சந்திப்புகளிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

இந்திய பிரதமருடனான சந்திப்பில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நாங்கள் உடன்பட்டிருந்த அறிக்கையின் முன்னேற்றகரம் தொடர்பில் கலந்துரையாடினோம்.

அவற்றில் சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டன. இவற்றுக்கான தெளிவுபடுத்தல் தேவைப்பட்டது, அவை தொடர்பிலும் பேசினோம்.

அதேபோல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கைச்சாத்திடப்படவுள்ள புதிய பொருளாதார, தொழில்நுட்ப உடன்படிக்கைகள் (எட்கா) தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான தடைகளை நீக்கி அவற்றை இறுதிப்படுத்தி முன்னோக்கிச்செல்வது குறித்து தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.