பைஸர் முஸ்தபாவை கைவிடாது கூட்டரசு!

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்கள் எவருமே ஆதரவு வழங்கமாட்டார்கள் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா குற்றமற்றவர் என்பதால் அவரைக் காப்பற்றவேண்டிய கடப்பாடு தமக்குள்ளது என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயம் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசம்பர் 4ஆம் திகதிவரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், ஜனவரி இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போகக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

இந்நிலையில், தேர்தலை திட்டமிட்ட அடிப்படையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா இழுத்தடிக்கிறார் என்றும், தமக்குரிய கடப்பாட்டை அவர் மீறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டி அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியும், ஜே.வி.பியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வந்துள்ளன.

அமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கட்சி எம்.பிக்களும் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது அவர் கூறியவை வருமாறு, எல்லை நிர்ணயத்தில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன எனச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, எந்தவொரு தரப்புக்கும் பாதிப்பேற்படாத வகையில் தீர்வை முன்வைப்பதற்காக அமைச்சர் குழுவொன்றை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கைக்கமையவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டபோதும் சர்ச்சை ஏற்பட்டது. அதனையும் அமைச்சர் பைஸர் தீர்த்துவைத்தார்.

இவ்வாறு ஜனநாயக முறைப்படி அனைவரும் ஏற்கும் வகையில் தேர்தல் நடத்த முற்படும் ஒருவரை குற்றவாளி எனக் கூறமுடியாது. எனவே, அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.