ஐ.தே.கவுடனான கூட்டை நிறுத்த சு.க. இரகசிய தீர்மானம்?

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணி உறவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முறித்துக்கொள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இரகசியமாகத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையே இடம்பெற்ற கடுமையான கருத்து மோதல்களையடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த மத்திய குழுக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் அவர்களுடன் இணைந்து தொடர்ந்து ஆட்சியை நடத்துவது அர்த்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

அப்போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ராஜபக்ஷ கள்ளர்களுடன் இணைந்து ஆட்சியை நடத்துவதை விட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியை நடத்துவது மேலானது எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இருவரும் கடுமையான வாய்த்தர்க்கங்களில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தர்க்கம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தற்போது நடக்கும் பிணைமுறி மோசடி விசாரணைகளால் ஐக்கிய தேசியக் கட்சியைப் பார்த்து முழு நாடே சிரிப்பதாகக் கடுந்தொனியில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி கூட்டம் முடிந்த பின்னர் நீண்ட நேரம் மந்திராலோசனை நடத்தியுள்ள சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குப் பின்னர் நீடிக்கக்கூடாதென ஏகமனதாக கொள்கையளவில் தீர்மானித்துள்ளனர்.

பரபரப்பான இந்தக் கொழும்பு அரசியல் சூழ்நிலையால் நல்லாட்சியை உருவாக்க முயற்சித்த புத்திஜீவிகள் மற்றும் இராஜதந்திரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என அறியமுடிகின்றது.