தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடமை

Report Print Samy in அரசியல்

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டன. எல்லாச் சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

மாசி மாதம் இலங்கையின் சுதந்திர தினத்தை அடுத்துவரும் முதல் சனிக்கிழமையில் தேர்தல் நடத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

எனினும் எதிர்வரும் 27ஆம் திகதிதான் அது தொடர்பான உறுதியான அறிவிப்பு வெளியாகும். எப்படியிருந்தாலும் மாசி மாதத்தில் தேர்தல் நடப்பது உறுதி என்பதால் கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரம் காட்டுகின்றன.

அண்மையில் உருவாகிய மகிந்த ஆதரவுக் கட்சி உட்பட வடக்கில் பல கட்சிகளும் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் அக்கறை காட்டுகின்றன. எனினும், கூட்டமைப்புக்குப் பலத்த போட்டியை வழங்கக்கூடிய எந்தவொரு அணியும் களத்தில் இல்லை.

தமிழ் மக்கள் பேரவையைக் களத்தில் இறக்கி விடுவதற்கு அதிலிருந்த சிலர் எடுத்த முயற்சிகளும் பிசுபிசுத்துப்போன நிலையாலும் தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் ஈபிஆர்எல்எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் இடையிலான கூட்டு இன்னமும் சரிவர ஒழுங்கமைக்கப்படாத நிலையாலும் கூட்டமைப்பின் ஏகபோகத்தனத்திற்கு அச்சுறுத்தல் ஏதும் தற்போது களத்தில் இல்லை.

உள்ளுராட்சித் தேர்தல்கள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகள் தேர்தலைப் போன்றதல்ல. இங்கு வெற்றி தோல்விகள் வெறும் அரசியல் கொள்கைகளின் பாற்பட்டுத் தீர்மானிக்கப்படுபவையல்ல.
அதையும் தாண்டி உள்ளுரில் நிறுத்தப்படும் வேட்பாளரின் செல்வாக்கும் தீர்மானகரமான பங்களிப்பை வழங்கும். அதிலும் இம்முறை தொகுதி ரீதியான போட்டியில் வேட்பாளரின் பங்களிப்பு இன்னும் கணிசமானதாக இருக்கும்.

அதற்காகக் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடுகளைப் புறக்கணித்துவிட்டு மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று எண்ணிவிட முடியாது. எனவே இந்தமுறை தேர்தல் பரப்புரையை புதிய அரசமைப்பு தொடர்பான விடயங்கள் ஆக்கிரமித்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதிலும் குறிப்பாக, ஒற்றையாட்சி, பெளத்த மதத்துக்கு முக்கியத்துவம், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பவை அதிகம் கவனம் பெறப்போகும் விடயங்களாக இருக்கும்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இந்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுத்து விட்டது என்கிற பலத்த குற்றச்சாட்டு அதன் மீது உண்டு. தமிழ் மக்களின் அடிப்படைகளையே விட்டுக்கொடுத்து விட்டு அரைகுறைத் தீர்வைக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்கப்போகிறார்கள் என்கின்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

எனவே தேர்தல் பரப்புரையில் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகளின் முக்கிய ஆயுதமாக இந்தவிடயமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கூட்டமைப்புக்கு வாக்களித்துவிட்டால் தமிழர்கள் ஒற்றையாட்சியை அங்கீகரித்து விட்டார்கள் என்றும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இணங்கி விட்டார்கள் என்றும், வடக்கு கிழக்கு இணைப்புத் தேவையில்லை அல்லது அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அங்கீகரித்து விட்டார்கள் எனவும், கூட்டமைப்பு பின்னர் இவற்றையெல்லாம் திரிபுபடுத்தி விடும் என்றும் அதனால் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கக்கூடாது என்றும், அவர்கள் கோருவார்கள் என்பது திண்ணம்.

அரசியல் களத்தில் கூட்டமைப்புக்கு நிகரான மாற்று ஒன்று இல்லாத நிலையில், உருவாக முடியாதிருக்கும் யதார்த்தத்தில் கூட்டமைப்புக்கு வாக்களிக்கக்கூடாது என்று கோருவதும் அந்தக் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக மக்களுக்குத் தோன்றக்கூடிய சூழல் இருப்பதும் மக்களை வாக்களிப்பில் இருந்து அந்நியப்படுத்தி விடும்.

அவ்வாறு வாக்களிப்புக்குச் செல்வதை மக்கள் குறைத்துக் கொள்ளும் போது, ஏனைய தரப்புகள் பெறும் குறைந்தளவு வாக்குகள்கூட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக அவற்றுக்கு அதிக ஆசனங்களைப் பெற்றுத்தரக் கூடியதாக அமைந்து விடும்.

இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் மனங்களில் இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். தேர்தல் அறிக்கை மூலமாகவே அதனைக் கூட்டமைப்பால் செய்யக்கூடியதாக இருக்கும்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து விலகாத வகையிலும், ஏற்கனவே தாம் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆணையிலிருந்து விலகாத வகையிலும், தமது தேர்தல் அறிக்கையை கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும்.

சிக்கலான சட்டமொழிக் கையாளுகையை விடுத்து அனைத்து மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான தேர்தல் அறிக்கை ஒன்றைக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் விடுக்க வேண்டும். அதன் மூலமே மக்களை வாக்களிப்பு நிலையங்களை நோக்கி அதனால் கவர முடியும்.

அத்தோடு தன் மீதான சந்தேகங்களைக் களைவதும், மக்களின் ஆணையிலிருந்து தான் விலகிச் செல்லவில்லை என்பதை எண்பிப்பதும் கூட்டமைப்பின் கடமையும் கூட.

newuthayan