மக்களை துன்பப்படுத்தி இருந்தால் விக்னேஸ்வரனின் தலை துண்டிக்கப்பட்டு இருக்கும்: சரத் வீரசேகர

Report Print Shalini in அரசியல்
476Shares

ஒரு முஸ்லிம் நாடொன்றில் வாழும் முல்லாக்களை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் துன்பப்படுத்தி இருந்தால் அவரது தலை துண்டிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை விக்னேஸ்வரன் அறிந்துள்ளார். அதனால் தான் அவர் தனது அதிருப்திகளை பரவலாக வெளியிட்டு வருகிறார் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

“இது சிங்கள பௌத்த நாடல்ல” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் 74 சதவீதமான சிங்களவர்களும் இவர்களில் 85 சதவீதமானவர்கள் பௌத்தர்களாகவும் உள்ளனர். ஆகவே இது ஒரு பௌத்த நாடு.

ஆரம்ப காலத்தில் இலங்கையின் பெயர் “சிங்கலே” என்பதாகும். 1815இல் பிரித்தானியத் தலைவர்களாலும் சிங்கலே தலைவர்களாலும் கண்டிய சாசனம் எழுதப்பட்டது.

எமது நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் சிங்கலே என்ற பெயரைத் தொடர்ந்தும் பயன்படுத்தி இருந்தால் இந்த நாட்டிலுள்ள அனைவரும் சிங்களவர்களாக இருந்திருப்பார்கள்.

ஆகவே எமது நாடானது சிங்கள பௌத்த நாடு என அழைக்கப்படுவதை எவரும் எதிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர்கள் வடக்கில் குடியேறுவதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரும்பவில்லை, அதேநேரம் யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் கொழும்பிலுள்ள சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இதுவே ஒரு முஸ்லிம் நாடொன்றில் வாழும் முல்லாக்களை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு துன்பப்படுத்தி இருந்தால் அவரது தலை துண்டிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை விக்னேஸ்வரன் அறிந்துள்ளார். அதனால் தான் அவர் தனது அதிருப்திகளை பரவலாக வெளியிட்டு வருகிறார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்தர்கள் ஏனைய மதங்களை மதிக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நல்லிணக்கத்தை விக்னேஸ்வரன் போன்றவர்கள் அழிக்க முயற்சிக்கிறார்கள் எனவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.