ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட வேண்டும்?

Report Print Nesan Nesan in அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக்கூட்டம் நேற்று இரவு கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் மற்றும் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், இறக்காமம் - மாணிக்கமடு, மாயக்கல்லி மலை சிலை விவகாரம் ஒரு அப்பட்டமான அத்துமீறல்.

அது தொடர்பில் நமது முஸ்லிம் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் சகிதம் இருக்க அம்பாறையில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயாகமகே வழங்கிய பதில் “இறக்காமம் மாத்திரம் அல்ல கல்முனை இருந்து பொத்துவில்வரை பெளத்த புனிதபூமி எனவும் செய்யலாம் சிலையை அகற்ற முடியாது”.

மீறி மாயக்கல்லி மலையிலுள்ள புத்தர் சிலையினை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்யப் போவதாகவும் அன்று அமைச்சர் தயாகமகே அடித்து கூறினார்.

இப்படியானவர் இருக்கும் கட்சியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அட்டாளைச்சேனையில் தேர்தல் கேட்பதா..?

இந்த சிலைவைப்பு தொடர்பில் மக்களுக்கு இதுவரை ஏற்புடைய ஒரு பதிலை வழங்கவோ சர்ச்சைக்குரிய சிலையை அகற்றவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் கட்சியில் இணைந்து அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சிசபை கேட்பதா..?

அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தேர்தல் கேட்க முடியாது. ஒரு காலமும் இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியே அடங்கிப்போயிருக்க அடுத்த கட்டமாக வரும் தேர்தலை ஐக்கிய தேசிய கட்சிக்காக வென்று கொடுத்து விட்டு நமக்கென்று இருக்கும் ஒரு கட்சியின் பெயரையும் இல்லாமலாக்க இடமளிக்க முடியாது.

அப்படி ஒரு படுகுழியில் விழும் முடிவினை அட்டாளைச்சேனை மக்கள் எடுப்பார்களேயானால் அதனை விட பாரிய நஷ்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே மக்களை ஏமாற்ற நான் ஒருபோதும் முன் நிற்க மாட்டேன். மக்களுக்காக எடுக்கும் முடிவு அது மக்களுக்கு ஏற்ற முடிவாக இருக்க வேண்டுமே தவிர மூடிய அறைக்குள் சிலரின் சுய நலனுக்கான சாக்கு நிரப்பும் முடிவாக இருக்கக் கூடாது.

ஆகவே அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்க வேண்டும் என்பதே எனது ஆணித்தரமான கருத்தாகும் என தெரிவித்துள்ளார்.