மைத்திரியும் ரணிலும் ஆஜராகவில்லை - திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கை மூன்றாது முறையாகவும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

வழக்கின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை இருப்பதாக கூறி போலி ஆவணம் ஒன்றை பகிரங்கப்படுத்தி இனங்களுக்கு இடையிலான சகவாழ்வை சீர்குலைக்க முயற்சித்ததாக திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொள்ளவிருப்பதால், தமது தரப்பு வாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதற்காக வேறு திகதி ஒன்றை பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெ்பரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரியப்படுத்தும்படி சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளது.

அதேவேளை திஸ்ஸ அத்தநாயக்க இம்மாதம் 10ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவுக்கு செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.