கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையே நாளை முக்கிய சந்திப்பு!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

உள்ளூராட்சி சபை தேர்தல் ஆசன பங்கீடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் நாளைய தினம் 2ஆம் கட்ட சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் பின் புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் முக்கியமான சில தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஆசன பங்கீடு தொடர்பாக இம்மாதம் 3ஆம் திகதி முதலாவது தடவையாக கூடி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில் மிக பெரும்பான்மை ஆசனங்களை தமிழரசு கட்சி கேட்டிருப்பதனால், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரொலொ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் பூரண உடன்பாட்டினை தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில் 2வது தடவையாக நாளைய தினம் மீண்டும் கூடி பேச்சு நடத்தவுள்ளன. இந்நிலையில் ரெலோ கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

“ஆசன பங்கீடு தொடர்பாக உடன்பாடற்ற தன்மைகள் காணப்படுகின்றது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லையானால் நாளைய தினம் மாலை 6 மணிக்கு ரெலோ அமைப்பின் உயர்மட்ட குழு வவுனியாவில் உடனடி கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த கூட்டத்தில் நாங்கள் சில முக்கியமான தீர்மானங்களை எடுத்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவோம்” என

கூறியுள்ளனர்.

இதேவேளை புளொட் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலருடன் பேசியபோது “பெரியளவில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இல்லை. நாங்கள் சில விடயங்களை கூறியுள்ளோம். அதில் சிலவற்றுக்கு உடன்பட்டுள்ளார்கள். அதேபோல் சிலவற்றுக்கு உடன்படவில்லை.

ஆனால் நாளைய கூட்டத்தில் உடன்படாத சில விடயங்களுக்கு உடன்படுவார்கள் என நம்புகிறோம். அவ்வாறு உடன்படவில்லை என்றால் அதற்கு பின்னர் புளொட் தனது தீர்மானத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும்” என கூறியுள்ளனர்.