கூட்டமைப்பிலிருந்து பிரிந்த டெலோ எடுத்துள்ள திடீர் முடிவும் முக்கிய சந்திப்பும்!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள ரெலோ அமைப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணம் - நீர்வேலியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) இன் கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

ரெலோ அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வினோநோதராதலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் உதய சூரியன் சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று மாலைக்குள் ரெலோ கட்சி தனது இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும், தமது கட்சி இனிவரும் காலங்களில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படாது என்றும் ரெலோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பிலிருந்து விலகி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதாக முடிவெடுத்திருந்தது.

எனினும் இரு கட்சிகளுக்கும் இடையில் சின்னம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி அதிலிருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில் கூட்டமைப்பிலிருந்து விலகிய மற்றுமொரு கட்சியான டெலோவும் சுரேஸூடன் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.