கோத்தபாய நீதிமன்றை பிழையாக வழிநடத்தியுள்ளார்!– சட்ட மா அதிபர் திணைக்களம்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவு ஒருதலைப்பட்சமானது என சட்ட மா அதிபர் நீதிமன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பொதுசொத்துக்கள் துஸ்பிரயோகச் சட்டத்தின் கீழ் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்த சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது எனக் கோரி நீதிமன்றில் கோத்தபாய மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த மனுவை மீளவும் பரிசீலனை செய்த நீதிமன்றம் நேற்றைய தினமும் தடையுத்தரவை எதிர்வரும் 15ம் திகதி வரையில் நீடித்துள்ளது.

இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ஒருதலைப்பட்சமானது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றிற்கு பொய்யான தகவல்களை தகவல்களை வழங்கி நீதிமன்றை பிழையாக வழிநடத்தி இடைக்கால தடையுத்தரவு பெற்றுக் கொண்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கருத்து கோரப்படவில்லை எனவும், மேலும் இடைக்கால தடையுத்தரவு காலம் நீடிக்கப்படும் முன்னதாகக் கூட கருத்து கோரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.