எமது கட்சி பதவிகளை எதிர்பார்த்து விலைபோவதில்லை

Report Print Sinan in அரசியல்

தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அனைவரினதும் தார்மீகப் பொறுப்பாகும் என மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

ஹட்டனில் உள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மலையகத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோம்.

மலையக தேசிய முன்னணி கட்சியானது கொள்கைகளை முன்னிலைப்படுத்திய கட்சியாகும். எமது கட்சி பதவிகளை எதிர்பார்த்து விலைபோவதில்லை.

எமது கட்சியின் பிரதான பலங்களில் ஒன்று சீரிய ஒழுக்க விதிகளை பின்பற்றுவதாகும், இந்த ஒழுக்க விதிகள் தேர்தல் காலத்திலும் பூரண அளவில் பின்பற்றப்பட வேண்டும்.

இங்கு வேட்பாளர்களாக போட்டியிடும் நோக்கில் நேர்முகத் தேர்விற்கு காத்திருக்கும் அனைவரும் கட்சியின் ஒழுக்க விதிகளை பின்பற்ற வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக் கூடாது, தேர்தல் சட்டங்களை 100 வீதம் மதித்து அதன் அடிப்படையில் நாம் போட்டியிட வேண்டும்.

சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு மலையக தேசிய முன்னணி முழு அளவில் ஆதரவளிக்கும்.

மலையக மக்களின் சமூக பொருளாதார உரிமைகளை மேம்படுத்தி உறுதி செய்யவும், அரசியல் ரீதியான அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கவும் எமது கட்சி அயராது குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.