மக்கள் நலன்களுக்காகவே என்பது தான் வேடிக்கை!

Report Print Samy in அரசியல்

உள்ளூராட்சித் தேர்தல் களேபரங்கள் தீவிரமாகி இருக்கின்றன. அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்க் கட்சிகளிடையே புதிய அணி உருவாக்கங்கள், தாவல்கள் எல்லாம் தீவிரப்பட்டுள்ளன.

பங்கீடுகளில் காணப்படும் இணக்கமின்மைகள் மேலும் மேலும் புதிய குத்துக் கரணங்களைக் காட்டக்கூடும் என்கிற அறிகுறிகள் தெரிகின்றன.

இவற்றில் வேடிக்கை என்னவென்றால், எல்லாக் கட்சிகளும் நபர்களும் தமது அரசியல் சுயநலன்களுக்காகவே இந்த முடிவுகளை எடுக்கின்ற போதும் அந்த முடிவுகள் அனைத்தும் மக்கள் நலன்களுக்காகவே எடுக்கப்படுவதாக மக்களை நம்ப வைக்க முற்படுவதும், உண்மை தெரிந்து கொண்டே மக்களும் அதை நம்புவது போன்று நடிப்பதும் தான்.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதாக அறிவித்தது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுடன் அந்தக் கட்சி அணி சேரும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட போதும் பின்னர் அது நடக்கவில்லை.

பதிலாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் அந்தக் கட்சி கூட்டுச் சேர்ந்தது. அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இரு கட்சி களும் நேற்றுக் கைச்சாத்திட்டன.

இந்த அணியில் வந்து சேர்ந்து கொள்ளுமாறு ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்த அழைப்பை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்து விட்டார்.

அதற்கு அவர் முன்வைத்தது இரண்டு காரணங்கள்.

அவரது முதலாவது காரணம், விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே கூட்டணியின் சின்னமான உதயசூரியனைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்து புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் எதிராக நடந்து கொண்டவர் அவர், அதனால் அது போன்றதொரு நிலைமை எதிர்காலத்தில் புதிய கூட்டுக்கும் வராது என்பது என்ன நிச்சயம் என்பது.

இரண்டாவது காரணம், கொள்கை அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைப்பை மறுப்பவராகவும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு வழங்கினால் போதும் என்று சொல்பவராகவும் இருக்கும் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியுடன் தமது கட்சியின் கொள்கை ஒத்துப்போகாது, எனவே இணைவு சாத்தியமில்லை என்பது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஈபிஆர்எல்எவ் முன்வைத்தவையும் இந்த இரண்டாவது காரணமே.

தமிழ் அரசுக் கட்சி இதில் விட்டுக்கொடுப்புடன் நடப்பது ஏற்புடையதல்ல என்று கூறிவிட்டே சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியேறினார்.

ஆனால், கூட்டமைப்பைவிட விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளக் கூடியவரான சங்கரியுடன் சேர்வதில் அவருக்குப் பிரச்சினை ஏதுமில்லை.

அவருக்கு மட்டுமல்ல, கூட்டணியுடன் சேர்ந்துள்ள மற்றைய தரப்புகளான தமிழ் அரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர், முன்னாள் போராளிகள் என்று சொல்லப்படுவோர் சிலர் ஆகியோரும் அண்மைக் காலமாகத் தமிழரசுக் கட்சி கொழும்பு அரசுடன் அதிகம் விட்டுக்கொடுப்புடன் நடந்து வருகின்றது என்று விமர்சித்தவர்களே!

இவர்களுக்கு மேலதிகமாக பங்கீட்டில் தமக்கு அதிகளவு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதால் ரெலோ கட்சியும் இந்த அணியில் சேர்வது குறித்து பேச்சு நடப்பதாக நேற்றுச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

ஒரே கூட்டமைப்பில் இருந்தாலும் மற்றக் கட்சிகளையும் சமமாக மதித்து அவர்களையும் சேர்த்திணைத்துச் செல்லும் வகையில் அல்லாமல் எல்லாம் வேண்டும் என்பது போல தமிழரசுக் கட்சியும் நடந்து வருகின்றது.

ஆக மொத்தத்தில், ஒரு சில விதிவிலக்கு அரசியல்வாதிகளைத் தவிர அரசியல் என்பது வெறுமனே கட்சி நலன் சார் தொழிலே தவிர மக்கள் நலன் சார் செயற்பாடு அல்ல என்பதை இந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் நிரூபித்து விட்டது.

ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் நலனை மேம்படுத்துவதற்காகவும் நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை மக்களுக்குப் பெற்றுத் தருவதற்காகவும் தான் தாங்கள் அரசியல் செய்கிறோம் என்று கட்சிகளும் அரசியல்வாதிகளும் கூசாமல் பொய் சொல்வதில் தான் அவர்களின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது என்பது தான் வேடிக்கை.

newuthayan