கூட்டமைப்புக்குள் பூகம்பம்: சம்பந்தனுடன் ரணில் அவசர பேச்சு! மாவை, சுமந்திரன், செல்வம் களத்தில்

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கும் இழுபறி நிலைமையைத் தீர்த்து சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடியாகவே இறங்கியுள்ளார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுடன் நேற்று பிரதமர் ரணில் பேச்சு நடத்தியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இதர விடயங்களுக்கு கூட்டமைப்பின் ஒற்றுமைத் தன்மை அவசியம் என்பதனை இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புளொட் தலைவரும் எம்.பியுமான சித்தார்த்தனுடனும் பேச்சு நடத்தியுள்ள பிரதமர், தற்போதைய சூழ் நிலையில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் என அறியமுடிந்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்று ரெலோவின் தலைமைக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்தக் கட்சியை வழிக்குக் கொண்டு வந்து பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு 10 மணிமுதல் நேற்று அதிகாலை 1.15 மணிவரை வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு ரெலோ வந்துள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா நேற்று அதிகாலை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ள ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியோருடன் நேற்றுக் காலையிலிருந்து நண்பகல் வரை ரெலோவின் ஸ்ரீகாந்தா அணியினர் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதன்போது 'உதயசூரியன்' சின்னத்தில் ரெலோ போட்டியிட்டால் ஆசனங்கள் எத்தனை கிடைக்கும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கிடையில் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பிலும், கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறத் தீர்மானித்துள்ளமை தொடர்பிலும் ரெலோவின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

அத்துடன் அவர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் நேற்று நீண்டநேரம் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.

அதேவேளை, நேற்று திருகோணமலைக்குச் சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழி தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடனும் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.

இந்தப் பேச்சின் பின்னர் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் விருப்பத்துக்கு இணங்க அவருடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 7 மணிவரை கொழும்பில் வைத்து பேச்சு நடத்தினார்.

இதன்போது, "கூட்டமைப்புக்குள் இருந்து ரெலோ வெளியேறும் முடிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக எடுக்கவிலை. எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும்" என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார்.

இந்தப் பேச்சையடுத்து சுமந்திரன் எம்.பி. நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு இன்று மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஆசனப் பங்கீடு தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.