கொழும்பில் மேயர் பதவியை குறிவைத்துள்ள முக்கிய வேட்பாளர்கள்!

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதில் பிரதான அரசியல் கட்சிகள் ஆர்வங்காட்டி வருகின்றன.

கொழும்பு மாநகர சபையானது முக்கியத்துவமிக்க சபையாகக் கருதப்படுவதுடன், அந்த சபையில் மேயராக பதவி வகிப்பவர், மத்திய அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவருக்கு நிகரான சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பார்.

மகிந்த ஆட்சிக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தாலும் கொழும்பு மாநகர சபையே அதற்குக் கைகொடுத்தது.

அத்துடன், தேர்தல் வெற்றி நாயகன் என போற்றப்படும் மகிந்தவால்கூட குறித்த மாநகர சபையைக் கைப்பற்ற முடியாமல் போனது.

இவ்வாறு பல வழிகளிலும் கொழும்பு மாநகர சபையானது முக்கியத்துவமிக்க சபையாகக் கருதப்படுகின்றது. இதனால்தான் இம்முறை கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றிவிடவேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் கங்கணங்கட்டியுள்ளன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி. ரோஸி சேனாநாயக்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அஸாத் சாலியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒமர் காமிலும் முதன்மை வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் திருகேதீஸ் செல்லசாமி மேயர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.