முற்போக்குக் கூட்டணியும், மு.காவும் ஐ.தே.கவுடன் இழுபறி நிலையில்! பேச்சுவார்த்தைகள் தோல்வி

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ள பங்காளிக்கட்சிகளுக்கும், ஐ.தே.கவுக்குமிடையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இழுபறி நிலையிலேயே முடிவடைந்துள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம்(06) நடைபெற்றுள்ளது.

குட்டித் தேர்தலில் யானைச் சின்னத்தின்கீழ்க் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் கடந்தவாரம் முதலே ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. உறுப்பினர்களுக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஐ.தே.க. வழங்கியுள்ள இட ஒதுக்கீடு திருப்திகரமாக அமைந்துள்ள போதிலும் கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களிலான ஒதுக்கீடு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை.

எனவே, மேற்படி மாவட்டங்களில் தனித்துக் களமிறங்குவதா அல்லது கூட்டணியாகப் பயணிப்பதா என்பது குறித்து முற்போக்கு கூட்டணிக்குள் ஆராயப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடக்கூடும் என்றும், கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களில் தனித்து செல்வது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது என்றும் அறியமுடிகின்றது.

எனினும், சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தின் கீழேயே போட்டியிட வேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைக் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உறுதியாக இருப்பதால் இனிவரும் நாட்களில் முடிவுகள் மாறக்கூடிய சாத்தியமும் இல்லாமல் இல்லை என அரசியல் விமர்சகர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதேபோல் முஸ்லிம் காங்கிரஸும் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை.

நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் இறுதி சுற்று பேச்சுகளாக அமையுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவை அனைத்தும் இழுபறி நிலையிலேயே முடிவடைந்துள்ளன.

இதேவேளை, கொழும்பு அரசியல் களத்தில் முக்கிய சந்திப்புகள் தொடரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.