பாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

Report Print Sumi in அரசியல்

வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற பாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாளில் கல்வி அமைச்சு மீதான விவாதம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

வேலியே பயிரை மேய்வது போன்று பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற துஸ்பிரயோகங்களுக்கு இவ்வாறான கடுமையான தண்டனைகளை வழங்குவதுடன் அவர்களைப் பகிரங்கப்படுத்தி சேவையிலிருந்தும் நீக்க வேண்டும்

வட மாகாணத்தில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவற்றில் சில சம்பவங்கள் வெளிவந்தாலும் பல சம்பவங்கள் வெளியே வராமலேயே மறைக்கப்படுகின்றன. இதற்குப் பல காரணங்களும் இருக்கின்றன.

இதிலும் குறிப்பாக பாடசாலைகளில் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சம்பவங்கள் எமது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறான மிகக் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அதிபர், ஆசிரியர், உயர் அதிகாரிகள் என்று பாராது அனைவருக்கும் எதிராக கடுமையானதொரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

குறிப்பாக அண்மையில் ஓமந்தையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவர் மீது துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் இதே போன்று பல தடவைகள் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டு இடமாற்றங்களே வழங்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறானவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதாக இல்லை என்றே நான் கூறுகின்றேன்.

ஏனெனில் கடந்த காலங்களில் அதாவது புலிகள் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அதற்கு அவர்களது தண்டனைகளே காரணமாகவும் இருந்துள்ளன.

ஆனால் தற்போது அவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அதனால் குற்றவாளிகள் தப்பித்துச் சென்று மீண்டும் அதே குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

ஆகவே இவ்வாறான குற்றச் செயல்கள் எமது சமூகத்திற்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவர்களை சேவைகளிலிருந்தும் நீக்க வேண்டும்.

இந்தப் பாதிப்புக்கள் நகர்ப்புறங்களில் குறைவாக இருந்தாலும் கிராமங்களிலேயே அதிகம் இடம்பெறுகின்றன. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பாதுகாக்கின்ற நிலையும் உள்ளதால் அமைச்சர் இவற்றைக் கவனத்தில் எடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், சின்னஞ்சிறு பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தும் எவராயினும் அவர்களுக்கு கடும் தண்டனையை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.