இராணுவம் நடத்தும் முன்பள்ளிகளை தொடர்ந்து செயற்பட அனுமதிப்பதா?

Report Print Rakesh in அரசியல்

வடக்கு மாகாணத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களைத் தொடர்ந்தும் இராணுவத்துடன் இணைந்து செயற்பட அனுமதிக்கப் போகிறோமா? அல்லது அதிலிருந்து மீட்டு மாகாண சபையுடன் இணைத்துக் கொள்ளப் போகின்றோமா? என வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் வன்னிப் பிரதேசங்களில் இராணுவம் முன்பள்ளிகளை நடத்துகின்றது. அவர்கள் நடத்தும் முன்பள்ளிகளில் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழே காணப்படுகின்றன. அதனை நடத்துகின்றவர்களும் படைத்தரப்பைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

அதனால் அங்கு கடமையாற்றும் அனைவரும் இராணுவம் எதற்கு அழைத்தாலும் குறிப்பாக போருக்கு அழைத்தாலும் செல்லவேண்டிய நிலையே உள்ளது.

ஆகவே, எமது மாகாணத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியர்களை அவர்கள் தொடர்ந்தும் வைத்திருக்கவிடுவதா இல்லையா என்றதொரு தீர்மானத்தை நாங்கள் எடுக்கவேண்டும்.

அவர்களை அவ்வாறு விடாது மீள எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், இராணுவம் நடத்தும் முன்பள்ளிகளை மீள எடுப்பது தொடர்பில் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் ஐனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers