தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்

Report Print Nesan Nesan in அரசியல்

அம்பாறை காரைதீவு பிரதேச சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு அந்த பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அங்கு சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் மகாசபைக்கு எமது ஆதரவினையும் வழங்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் தலைவரால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி பிரதேச சபைகள் உட்பட கல்முனை மாநகரசபைக்குமான தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது.

எனினும், காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ளபோதும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காகவும், தமிழர் மகாசபை சுயேட்சையாக போட்டியிடுவதை கருத்திற் கொண்டும் அந்த பிரதேச சபைக்கு போட்டியிடுவதில்லை எனவும் எமது ஆதரவை தமிழர் மகாசபைக்கு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை காப்பற்ற வேண்டியதன் காரணமாக தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் விட்டுக் கொடுத்து எமது மக்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவது தான் எமது கட்சியின் செயற்பாடாகும்.

அந்த வகையில் காரைதீவு பிரதேசசபையின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டியது எமது தமிழ் மக்களது கடமையாகும்.

எனவே அந்த பிரதேசத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் தமிழர் மகாசபைக்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.