தூய காங்கிரஸின் உறுப்பினர் உள்ளிட்ட பலர் தேசிய காங்கிரஸில் இணைவு

Report Print Nesan Nesan in அரசியல்

அம்பாறை - அட்டாளைச்சேனை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும், தூய காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஐ.எல்.நசீர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவை அவரது அக்கரைப்பற்று கிழக்கு வாசல் இல்லத்தில் நேற்றிரவு சந்தித்து, அவர் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான ஐ.எல்.நசீர், அக் கட்சித்தலைவர் மீது அதிருப்தியுற்று சில மாதகாலமாக தூய காங்கிரஸில் இணைந்து செயற்பட்டார்.

அத்துடன் சகல கட்சிகளை உள்ளடக்கிய முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கவும் முயற்சித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் மற்றும் தே.கா.கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.