கூட்டமைப்பின் தலைமைத்துவதில் உள்ள நம்பிக்கையே ஒற்றுமைக்கு காரணம்

Report Print Kumar in அரசியல்

வடக்கிலும் கிழக்கிலும் இருவர் பிரிந்து சென்றுள்ளனர். காலம் இன்னும் செல்லவில்லை. வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே அவர்கள் எங்களுடன் சேர்ந்து விடலாம் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் சென்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கி.துரைராஜசிங்கம்,

கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற ஒரு கட்சியென்பது அனைவருக்கும் தெரியும்.

எமது கட்சியில் வேட்பாளராக இடம் வழங்குவது தொடர்பில் எமது கட்சிக்கு முன்டியடித்துக் கொண்டிருந்த ஆட்சி ஆதரவாளர்கள் பெரும் சவாலாக இருந்தனர். அந்த விடயங்களை பல்வேறு விதமான நடவடிக்கைகள் மூலம் கடந்து வந்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தொடர்ந்து முன் கொண்டுசெல்வதில் தடங்கலை ஏற்படுத்தும் புயலாக இந்த தேர்தல் அமைந்துவிடுமோ என்று பலர் அஞ்சினார்கள்.

அவ்வாறான சில செயல்களும் நடைபெற்றாலும் கூட்டமைப்பின் தலைமைத்துவதில் உள்ள நம்பிக்கையினாலும் அவரின் ஆளுமை காரணமாகவும் கூட்டமைப்பாகவே ஒருங்கிணைந்து களமிறங்கியுள்ளோம்.

எங்களில் இருந்து வடக்கிலும் கிழக்கிலும் இருவர் பிரிந்து சென்றுள்ளனர். காலம் இன்னும் செல்லவில்லை. வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே அவர்கள் எங்களுடன் சேர்ந்துவிடலாம்.

கூட்டமைப்பினை பொறுத்தவரையில் ஒற்றுமை சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, இலட்சியத்தை நோக்கிய முன்னேற்றம் என்கின்ற விடயங்கள் எல்லாம் எங்களுக்கு சவாலாக அமையும் போது ஒற்றுமையெனும் விடயத்திலும் தமிழ் மக்களின் இலட்சியம் என்னும் விடயத்திலும் ஒன்றுபட்டு செயற்பட்டு வருகின்றோம்.

எங்களை விமர்சிப்பவர்களின் ஆளுமை மக்களுக்கு தெரியும். கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளனர். இடைஇடையே வந்து எங்களை தூற்றிச் செல்பவர்களுக்கு அது சந்தோசத்தினை கொடுக்கும் என்றால் சந்தோசப்படட்டும்.

துரதிஸ்டவசமாக முஸ்லிம் வேட்பாளர்களை இணைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் இணைத்துக்கொள்வோம். ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers