யாழில் மோதிக்கொண்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்! காரணம் வெளியானது

Report Print Murali Murali in அரசியல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில், சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மோதல் வரை சென்றிருந்தது.

வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோருக்கு இடையிலான நீண்ட இழுபறி பின்னர் மோதலில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“ நான் உட்பட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் இரவு 1 மணிவரையிலும் பரிசீலனை செய்து நகர சபைக்கான வேட்பாளர் பட்டியல் ஒன்றை தயாரித்திருந்தோம்.

அதனை நேற்று காலை ஒப்பிடுவதற்கும் தீர்மானித்திருந்தோம். மாகாண சபை உறுப்பினர் குறித்த நேரத்தில் வருவதாக தெரிவித்திருந்த போதிலும் அந்த நேரத்தில் அவர் வந்திருக்கவில்லை.

எனினும், நேரம் தாமதித்து வாகனம் ஒன்றில் ஆட்களுடன் வந்திறங்கினார். இதனையடுத்து வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர் யாருக்கும் தெரியாமல் சேர்க்கப்பட்டன. இதுதான் பிரச்சினைக்கு காரணம்.

இறுதி நேரத்தில் கே.சயந்தன் அவர்களின் நடவடிக்கையினால் சில இழுபறி நிலைகளும் ஏற்பட்டிருந்தன. இதன் போது காரில் சென்ற கல்வி நிர்வாகசபை அதிகாரி ஒருவரை இழுத்து வீழ்த்துவதற்கான நிலைமையை கூட அவர் ஏற்படுத்தியிருந்தார்.

அதனை நான் தடுக்க முற்பட்டிருந்தேன். இதன் போது கையில் தலைக்கவசத்தை வைத்திருந்தேனே தவிர யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. நாங்கள் வன்முறையை விரும்புவதில்லை.

எவ்வாறாயினும், எங்களது பகுதியில் மிகவும் மோசமாக நடந்துகொள்கின்ற தனி நபர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மக்கள் விரைவில் தகுந்த பாடத்தை காண்பிப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.