இலங்கை அரசின் இரட்டை வேடம்!

Report Print Samy in அரசியல்

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அண்மையில் அங்கீகரித்தது.

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப் தனது பரப்புரையின் போதே, தான் வெற்றிபெற்றால் இந்த அறிவிப்பை விடுப்பார் என்று தெரிவித்திருந்தார். அதன்படியே நடந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை பலஸ்தீனமும் அரபு நாடுகள் பலவும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில் நீண்ட காலமாக, இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப் படுவதற்கு முன்பாக இருந்தே ஜெருசலேமும் அதனைச் சுற்றிய பலஸ்தீனச் சமூகமும் வாழ்ந்து வருகின்றன.

அதனால் ஜெருசலேம் தமது பாரம்பரியத் தலைநகர் என்று பலஸ்தீனம் கோரி வருகின்றது.

சில நாள்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்த இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பென்சமின் நெத்தன்யாகு, பைபிளை மேற்கோள் காட்டி ஜெருசலேம் 3,000 வருடங்களுக்கு முன்பிருந்தே இஸ்ரேலின் தலைநகரம் என்பதை பலஸ்தீனர்கள் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, நாம் இந்தப் பத்தியில் சுட்டிக்காட்ட வந்தது அந்தப் பிரச்சினையை அல்ல.

இஸ்ரேல் -–பலஸ்தீனத்தின் இத்தகைய அரசியல் பின்னணிக்கு இடையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றது கொழும்பு.

ஏற்கனவே இருந்த தலைநகரான டெல் அவிவ் நகரிலேயே தமது தூதரகம் தொடர்ந்தும் இயங்கும் என்றும் கொழும்பு அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானது கொழும்பின் இந்த முடிவு. ஆனால், இது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய முடிவல்ல.

நீண்ட காலமாகவே கொழும்பு பலஸ்தீனப் பிரச்சினையில் அந்த நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் தெற்காசிய பெரும்பாலும் பொதுவுடமை வாதத்தால் ஈர்க்கப்பட்டவையாகவும் விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பவையாகவும் இருந்தன.

அந்த விளைவே பலஸ்தீனத்தை ஆதரிக்கும் கொழும்பின் போக்கும். அதன் தொடர்ச்சியாகவே கொழும்பின் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டும்.

இதில் உள்ள முரண் நகை என்னவென்றால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிராகரித்து பலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் கொழும்பு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதுடன் அவர்களின் நிலங்களைத் தனது இராணுவத்தைக் கொண்டு ஆக்கிரமித்து வைத்திருப்பது தான்.

பலஸ்தீனியர்களின் பிரச்சினையும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையும் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று அதிகம் ஒத்தவை.

இஸ்ரேல் பலஸ்தீனர்களிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றிய நிலப் பகுதியில் தனது தலைநகரத்தை விரிவாக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரிக்கும் கொழும்பு, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களில் இருந்து தனது இராணுவத்தையும் ஏனைய படைகளையும் திரும்பப் பெற மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது.

சொந்த மக்களின் துன்பத்தை, துயரத்தை உணர முடியாத ஓர் அரசு, அதே துன்பத்தையும் துயரத்தையும் சுமக்கும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவளிப்பதாகக் காட்டிக் கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இந்த விடயத்தில் தற்போதைய மைத்திரி, – ரணில் அரசு மட்டுமல்ல முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசும்கூட இது போன்றே பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டையே தொடர்ந்து வெளிக்காட்டி வந்தது.

ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி பெண்ணே என்பதைப் போன்று தான் கொழும்பின் இந்தச் செயல் நகைப்புக்கிடமாக இருக்கின்றது.

- Uthayan