கூட்டு எதிர்க்கட்சியினர் ஜீ.எல்.பீரிஸிடம் சட்ட ஆலோசனை பெற வேண்டாம்

Report Print Steephen Steephen in அரசியல்

சில உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

பொதுஜன முன்னணியின் வேட்புமனுக்களில் சிறிய தவறுகள் காணப்பட்டதால், நிராகரிக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்புமனுக்களில் பெரிய குறைப்பாடுகள் இருந்தும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, கூட்டு எதிர்க்கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்புமனுக்களில் கட்சியின் பெயருக்கு பதிலாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாகவும் இது மிகப் பெரிய தவறு எனவும் பியல் நிஷாந்த குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி தாக்கல் செய்த வேட்புமனுக்கள் 100இற்கு 100 வீதம் தவறுகள் இன்றி தயாரிக்கப்பட்டதாகவும் அதில் தவறுகள் இருக்கவில்லை எனவும் பிரதியமைச்சர் அஜித்.பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்தல், உறுதிப்படுத்திய தினம், கட்சியின் பொதுச் செயலாளர் கையெழுத்திடாமை என்பன சிறிய தவறுகள் அல்ல.

வெட்கத்தை மூடிமறைத்து கொள்ள கூட்டு எதிர்க்கட்சியினர் அவற்றை சிறிய தவறுகள் என்று கூறியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியினர் ஜீ.எல்.பீரிஸிடம் சட்ட ஆலோசனை பெறாது, தொழில் ரீதியாக சட்டத்தரணியிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு சட்டத்தை பற்றி தெளிவுப்படுத்த பொருத்தமான இடம் சிறிகொத்த எனவும் அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை தவிர நீதிமன்றத்தினால் நிராகரிக்கக் கூடிய வேட்புமனுக்களும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.