மரணிப்பதற்கு முன்னர் இவற்றை செய்வேன்!

Report Print Kumar in அரசியல்

எதிர்வரும் காலங்களில் என்னை நம்பியிருக்கின்ற மக்களுக்கு நான் மரணிப்பதற்கு முன்னர் என்னாலான அனைத்து உதவிகளையும் அரசியலூடாக செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நான் 1965ஆம் ஆண்டிலிருந்து தமிழரசுக் கட்சியின் தொண்டனாக இயங்கி இன்று வரை தமிழ்த் தேசியத்திற்காக எனது குடும்பத்தை அர்ப்பணித்தவன் என்ற வகையில், தமிழ்த் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் முன்னாலும் தமிழ்த் தேசியம் ஒன்றுபடவேண்டும் என குரல் கொடுத்தவன் என்ற வகையிலும் பாடுபட்டு வந்தேன்.

ஆனால் தற்போதைய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மேலும் சிலரும் இணைந்து என்னை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி வருமாறும் அந்த கடிதத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கூறினார்கள். இதற்கு அமைவாக முதலாம் மாதம் 15ஆம் திகதி அந்த கடிதத்தை ஒப்படைத்தேன்.

இதன்போது பொதுச் செயலாளர் ஊடாக தமிழரசுக் கட்சியின் 25 விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. அந்த படிவத்தை 15ஆம் திகதி கொண்டுவருவதற்காக அனுமதி கேட்டிருந்தேன்.

அன்றைய தினம் கொழும்பிற்கு செல்லவிருப்பதாகவும் படிவத்தை அதற்குப் பின்னர் கொண்டுவருமாறும் பொதுச் செயலாளர் என்னிடம் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து இரண்டாம் மாதம் 16ஆம் திகதி, மூன்றாம் மாதம் 24ஆம் திகதி என ஒன்பதாம் மாதம் வரை என்னையும், எனது ஆதரவாளர்களையும் தொடர்ந்து ஏமாற்றிய பின்னர் தொகுதி ரீதியாக தேர்தல் நடைபெறவிற உள்ளமையால் உங்களை எமது கட்சியினுள் உள்வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது என பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

எனது கட்சியிலிருந்து என்னை விலகிவருமாறும் அதற்கான கடிதத்தை ஒப்படைக்குமாறும் கூறியிருந்தனர்.

எனினும், கடிதம் வாங்கி பதினொரு மாதங்கள் என்னை ஏமாற்றிய பின்னர் என்னிடம் இப்படி கூறுவது தலைமைத்துவத்திற்கு பொருத்தமான நடவடிக்கையா என நான் கேட்டேன்.

இக்கால சூழலில் உங்களை உள்வாங்க முடியாதுள்ளது. நீங்கள் மாற்று வழியை நாடுங்கள் என பொதுச் செயலாளர் கூறினார்.

ஆகவே 11 மாதங்கள் ஏமாற்றப்பட்ட பின்னர் கட்சியிலிருந்து விலக வேண்டும், அதன் பின்னர் என்னை நம்பியுள்ள மக்களை வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுயேட்சைக் குழுவாகுதல் அல்லது தனிப்பட்ட கட்சிகளோடு இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளேன்.

பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்து செயற்படும் எண்ணம் எனக்கில்லை. தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு 1965ஆம் ஆண்டிலிருந்து பாடுபட்ட நான் தொடர்ந்தும் பாடுபடுவேன்.

அத்துடன் தமிழரசுக் கட்சி போன்று நான் யாருடைய மனதையும் நோகடிக்காமல் அனைவரது அரவணைப்போடும் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக உழைப்பேன்.

என்னை ஏமாற்றிய தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி விட்டேன். எதிர்வரும் காலங்களில் என்னை நம்பியிருக்கின்ற மக்களுக்கு நான் மரணிப்பதற்கு முன்னர் என்னாலான அனைத்து உதவிகளையும் அரசியலூடாக செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

எனது நோக்கத்தையும் மக்களின் வேண்டுகோளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற அவாவுடன் தான் நான் வெளியேறுகின்றேன். சுயேட்சையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன்.

தமிழ்த் தேசியத்தை வளர்த்தவர்கள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற பாமர வர்க்கத்தை சேர்ந்தவர்களே தவிர தனவந்தர்களோ, கல்விமான்களோ அல்ல.

வடக்கு, கிழக்கில் 85 சதவீதத்திற்கும் மேல் வாழ்கின்றவர்கள் பாமர மக்களாகும். அந்த மக்களே தமது வாக்குகள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாகாணசபை உறுப்பினர்களையும், பிரதேசசபை உறுப்பினர்களையும் உருவாக்கினார்கள்.

அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் தனவந்தர்களுக்கும், கல்விமான்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும், மண் கொள்ளையர்களுக்கும் பணத்தை காட்டி ஆசனம் கேட்கின்றவர்களுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நேற்றைய தினம் நியமனம் வழங்கப்பட்டு பொய்யான கையெழுத்துகள் எடுக்கப்பட்டதாகவும், ஏழு பேர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகியதாகவும் வானொலி மூலமும் பத்திரிகை மூலமும் அறிந்தேன். இது மன வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களை வழிநடத்துகின்றவர்களென தங்களை தாங்களே கூறிக்கொண்டிருக்கின்ற தலைவர்கள் தாங்கள் வாழ்வதற்காக மக்களை பகடைக் காயாக பயன்படுத்துவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும்.

பாமர மக்களை கறிவேப்பிலை போல உபயோகித்துவிட்டு தனவந்தர்களையும், கல்விமான்களையும் வளப்படுத்துவது வருங்காலத்திற்கு பொருத்தமற்றது.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியமும், தமிழர் ஒற்றுமையும் மலர வேண்டுமாயின் வாக்களித்த பாமர மக்களை மக்களாக கருத வேண்டும். மக்களின் பிரதி நிதிகளாக இருக்கவேண்டும்.

தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை கடவுளாக மதித்துவிட்டு வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பின்னர் தனவந்தர்களையும், கல்விமான்களையும் வளம்பெறச் செய்கின்றனர்.

தமிழ் மக்கள் கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், பண்பாடு, பாரம்பரியம் என அனைத்து விடயங்களிலும் மேலோங்கி நிற்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியவர்கள் தமிழ்த் தலைமைகள்.

பதவிக்காக அடிபட்டு மக்களை மேலும் மேலும் படுபாதாளத்தில் தள்ளாது, அனைத்து துறைகளிலும் மக்களை முன்னேற்றுவதற்கு வழி உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.