ரஷ்யாவின் தடையினால் அதிர்ச்சியில் இலங்கை! வெளிநாட்டுக்கு விரையும் உயர்மட்டக் குழு

Report Print Nivetha in அரசியல்

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை உட்பட அனைத்து கைத்தொழில் உற்பத்திகளுக்கும் ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளமையானது அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கைத்தொழில் உற்பத்திகளுக்கும் தற்காலிக தடை விதிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு பெருந்தோட்டைத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க அடுத்த வாரம் உயர் மட்டக் குழுவொன்றுடன் மெக்சிகோவுக்கு பயணமாகவுள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையில், ஒருவகை வண்டு இனம் இனங்காணப்பட்டமையே தடைக்கான காரணம் என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல், அமுலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் தேயிலையில், 23 வீதத்தை ரஷ்யா இறக்குமதி செய்கிறது. ஜனவரி முதல் கடந்த 10 மாத காலப்பகுதியில், இலங்கையிலிருந்து 41 ஆயிரத்து 300 இலட்சம் தொன் தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது.

இதனூடாக, இலங்கைக்கு 436 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் தற்காலிக தடை இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.