மாவைக்கு அவசரக் கடிதம்! வெளியான செய்திகளில் உண்மையில்லையாம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு முகவரியிட்ட கடிதத்தினை, அக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலனிடம் கையளித்தார்கள்.

சாவகச்சேரி நகர சபைக்கான தமது கட்சியின் வேட்புமனுப் பட்டியல் தயாரிப்பின் போது கபடநோக்குடன் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் அந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என குறித்த ஏழு பேரில் ஐந்து பேர் கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில்,

இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வெளியான செய்திகளில் உண்மையில்லை.

கட்சித் தலைமையுடன் அவசர சந்திப்பொன்று ஏற்பாடு செய்வதற்காக என்று கூறியே எம்மிடம் கையொப்பம் வாங்கப்பட்டது. இதனால் கட்சிக்கும், ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருந்துகின்றோம்.

தொடர்ந்தும் வெற்றிக்காக உழைப்போம் என்றும் கட்சித் தலைமைக்கும், ஆதரவளார்களுக்கும் உறுதி கூறி நிற்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.