யாழ். மாநகர மேயர் வேட்பாளராக ஆர்னோல்ட்

Report Print Sumi in அரசியல்
689Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர முதல்வராக வட மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் மற்றும் வேட்பாளர் தெரிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பாரிய விரிசல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், யாழ். மாநகர முதல்வராக வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வித்தியாதரனுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.

இருந்தும், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தான் யாழ். மாநகர முதல்வர் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அவர் அதனை மறுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில், யாழ். மாநகர சபை முதல்வராக போட்டியிடுவதற்கு ஐவரின் பெயர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது, யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக வட மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகியுள்ளார். இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட்டிடம் வினவிய போது,

கட்சியின், உயர்மட்ட தலைவரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் மாநகர முதல்வராக போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த 14ஆம் திகதி வட மாகாண அவைத்தலைவரிடம் இராஜினாமா கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.