உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து புளொட் ஒதுங்கும் என்று நாம் கூறவில்லை

Report Print Rakesh in அரசியல்
82Shares

உள்ளூராட்சி சபைத் தேர்தலிருந்து ஒதுங்குவதாக நாம் ஒருபோதும் கூறவில்லை என்று புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் பேச்சு இடம்பெற்றபோது, வலிகாமம் தெற்குப் பிரதேச சபையை எவ்வாறு முதன்மையாகக் கோரினோமோ அதேபோன்று வலிகாமம் மேற்குப் பிரதேச சபையையும் கோரியது உண்மைதான்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை ஒரு தேர்தல் தொகுதிக்குள் தனித்துள்ள சபை என்ற ரீதியில் அந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் அந்தச் சபை ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையாக நின்றதும் உண்மையான விடயம்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி முழுமையாக எடுத்துக்கொண்டபோதும் பிறிதொரு சபையை விட்டுக்கொடுக்கவும் முன்வந்தனர்.

இருப்பினும் நான் அதை விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சபைகளின் எண்ணிக்கைக்காக நாம் அடிபடவில்லை. அது நோக்கமும் இல்லை.

எடுக்கும் சபைகளுக்கு சரியான நேர்மையான கட்டுப்பாடான வேட்பாளர்களையும் நியமிக்கும் பொறுப்பும் உள்ளது. இதில் ஏதாவது குறைகள் ஏற்படின் பின்னர் அதற்கான பொறுப்பையும் சுமக்கத் தயாராக இருந்தல் வேண்டும்.

இந்தக் காரணத்தால்தான் வலிகாமம் மேற்கு தவிர்ந்த வேறு ஒரு சபை வேண்டாம் எனத் தெரிவித்தேன். நாம் தேர்தலிலிருந்து ஒதுங்கியதான தகவல் தவறானது.

ஏனைய சபைகளில் எமக்கு ஒதுக்கப்பட்ட விகித அடிப்படையிலான வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.