தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வட மாகாண இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

மத்திய அரசை போன்று வட மாகாண இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்களும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வட மாகாண இளைஞர், யுவதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மீண்டும் சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக எமது இளைஞர், யுவதிகளை தூண்டிவிட்டு அதன் மூலமாக குளிர்காய முயலாமல் இன்றைய மத்திய மற்றும் மாகாண ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், வட மாகாண இளைஞர் மற்றும் யுவதிகளது முக்கியப் பிரச்சினையாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

வட மாகாண இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் நாம் இயன்றளவு நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

ஆனால் நாம் தொடர்ந்தும் அரசியல் அதிகாரத்தில் பலம் பெற்றிருந்தால் மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலான நடவடிக்கைளை படிப்படியாகத் எடுத்திருப்போம்.

அதே நேரம், வட மாகாணசபையினாலும் எமது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினையை போதியளவு தீர்த்து பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

அத்தகைய முயற்சிகள் ஏதும் இதுவரையில் நடைபெறாமையால் தான் இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

எமது மக்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எமது இன உரிமையை அடகு வைப்பதாகாது. வேலைவாய்ப்பு என்பது எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.

எனவே, எமது இளைஞர்களது எழுச்சியானது தங்களது அடிப்படை மற்றும் ஏனைய உரிமைகளை மறுக்கின்ற உதாசீனம் செய்கின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானதாகவே இருக்க வேண்டும்.

அது மத்தியானலும் சரி, மாகாணமானாலும் சரி. எங்கெல்லாம் எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உரிமைப் போராட்டங்கள் எழ வேண்டிய நிலையினை ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றவர்கள் உருவாக்கி வருகின்றனர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.