கூட்டு அரசு நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதைச் சாதித்துள்ளது?.

Report Print Samy in அரசியல்

அன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை உலகுக்குக் கொண்டு வரும் நத்தார், இனங்களுக்கு இடையில் சக வாழ்வையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.திருகோணமலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரச நத்தார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்துக்காக இனங்களுக்கு இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் பலமாக இருக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு போர் இடம்பெறாத வகையில் அனைத்து இனங்கள் மற்றும் சமயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபடுமாறு இந்த நத்தாரில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் அங்கு வைத்துத் தெரிவித்துள்ளார்.

‘படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்’ என்ற கூற்றுக்கு அமைவாகவே ஜனாதிபதி உதிர்த்த கருத்துக்களை எண்ணிவிட்டுச் செல்ல தமிழ் மக்களால் முடிகிறது.

ஏனெனில் தன்னை நல்லாட்சி என்று அடையாளப்படுத்திக் கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி – ரணில் கூட்டு அரசும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு காத்திரமான பங்களிப்பு எதையும் வழங்கவில்லை.

கூட்டு அரசு கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் ஏலவே ஒரு நத்தார் பண்டிகையை எதிர்கொண்டு விட்டது.

கடந்த வருட நத்தார்ப் பண்டிகையிலும் இவ்வாறான ஒரு கருத்தையே ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார். இந்த வருட நத்தார் பண்டிகையிலும் கடந்த வருடத்தில் தெரிவித்த கருத்துக்களின் சாரப்படவே அவர் பேசியுள்ளார்.

எனில், இந்த ஒரு வருடத்தில் கூட்டு அரசு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் கட்டியெழுப்ப எதைச் சாதித்துள்ளது. இனியாவது சாதிக்கும் என்று எவ்வாறு நம்புவது.

வடக்கில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைகளின் பின்னணியில் சீருடையினர் உள்ளனர் என்ற வலுவான சந்தேகம் தமிழ் மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

சிங்கள, பௌத்த மயமாக்கல் தமிழர் தாயகத்தில் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.போர் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் காணி விடுவிப்புக்காக எம்மவர்களில் பலர் இன்றும் வீதிகளில் காத்துக் கிடக்கின்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் உறவினர்களும் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் குரல்கொடுத்து வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த மைத்திரி – ரணில் கூட்டாட்சியும் முன்வரவில்லை.

இவை போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் தமிழர் தாயகத்தில் வியாபித்து இருக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் நத்தார் தின உரையை எவ்வாறு எடுத்துக்கொள்வது.

புதிய அரசமைப்பின் உருவாக்கத்தின் மூலமாவது தமக்கு விடிவு கிடைக்கும் என்று தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

ஆனால் அரசமைப்பில் உள்ளது ஒற்றையாட்சியா அல்லது கூட்டாட்சியா என்ற வாதப்பிரதி வாதங்கள் அதன் உருவாக்கத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளன.

இந்த விடயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் எவ்வாறு சாத்தியமாகும். சாத்தியப்படலாம் அடுத்த நத்தார் உரையொன்று. செயல்களே தேவை, மாறாக உரைகள் அல்ல.

- Uthayan