கூட்டு எதிர்க்கட்சியினரை அவதானிக்க புலனாய்வாளர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மேற்கொள்ளும் அரசியல் செயற்பாடுகளை அவதானிக்க புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஒரு தொகுதிக்கு ஒருவர் என்ற அடிப்படையினர் புலனாய்வாளர்களை நியமிக்குமாறு சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

இதனடிப்படையில், தேர்தல் பிரசாரங்களில் கலந்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகளின் குரல் பதிவுகள்,புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யுமாறும் பிரச்சாரத்தில் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்களை சேகரிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கு வாராந்த அறிக்கை வழங்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

தேர்தலுக்கு பின்னர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமல்லாது சிரேஷ்ட உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.