வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை! 400 உத்தியோகத்தர்கள் களத்தில்

Report Print Thileepan Thileepan in அரசியல்
109Shares

பண்டிகைக் காலத்தில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத்தின் விசேட விற்பனைக் கூடத்திற்கு இன்று வருகை தந்து பொருட்களின் விலைகள் தொடர்பில் அறிந்து கொண்ட அவர், பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுடன் உரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை இல்லாத காரணத்தினால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அதி கூடிய விலைக்கு அதனை விற்று வந்ததை நாங்கள் அறிவோம். அதனால் அரசாங்கம் இலங்கையில் அரிசியை இறக்குமதி செய்கின்ற பொழுது இருந்த தீர்வையை முற்றாக நீக்கியிருக்கிறது.

அதேபோல் விரும்பியவர்கள் யாராக இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் அதற்கான உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிசம்பர் மாதத்தில் அதேபோல் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி வரையில் சலுகை விலை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆர்ப்பிக்கோ, கார்கில்ஸ் பூட்சிற்றி, சதொச போன்ற இடங்களில் சாதாரண விலையில் பொருட்களை பெற முடியும்.

தேவையான எல்லா வகையான அரிசிகளும் சாதாரண விலையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீனி, பருப்பு, சமன்டீன் போன்ற அத்தியாவசிப் பொருட்களும் இலங்கையின் எல்லா சந்தைகளிலும் உள்ளதுடன் எல்லாப் பாகங்களிலும் லொறி மூலம் விற்பனை செய்வதற்கு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பணித்திருக்கின்றேன்.

எனவே தேவையான அளவு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருக்கின்றது. அதேபோல் ஏனைய பொருட்கள் இருக்கின்றது. கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் எமது அலுவலகத்திற்கு தெரியப்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளவிய ரீதியில் 400 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களை இந்தப் பணிக்காக அமர்த்தியிருக்கின்றேன் என்றார்.