இலங்கை - சீனா உறவில் விரிசல் ஏற்படும் அபாயம்!

Report Print Samy in அரசியல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்காக மகிந்த மற்றும் சீன ஜனாதிபதி இணைந்து நட்ட அடிக்கல்லைத் தகர்த்து அதனைக் கடலில் போட்டுள்ளனர். இது சீனாவுக்குத் தெரிய வந்தால் அந்த நாடு இலங்கையுடனான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சிறி வஜிராசர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மகிந்த மீதுள்ள பீதியினாலேயே இவ்வாறான செயற்பாடுகளை அரசு மேற்கொள்கிறது. இது போன்ற செயற்பாடுகளால் இலங்கைக்கும் வெளிநாடுகளுக்குமிடையில் உள்ள உறவில் பெரிய விரிசல் ஏற்படுவதற்கும் இடமுண்டு.

துறைமுக நகரத்திட்ட அடிக்கல் அகற்றப்பட்டமைக்கு எதிராகச் சீன அரசு எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அந்த நாடு இது தொடர்பில் பதில் வழங்குமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கான தலைமையும் தற்போதில்லை.

சீனாவும் எமது நாட்டுடனான உறவைத் துண்டிக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் எங்கு செல்லும் என்று தெரியாது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நத்தார் பண்டிகையைக்கூட மக்கள் உரிய வகையில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த இரண்டரை வருட ஆட்சியில் அரசு நாட்டில் அபிவிருத்திகளை ஏற்படுத்தவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் கிராம மட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசு முயற்சிக்கிறது.

அவை வெறும் அரசியல் நோக்கம் கொண்ட அபிவிருத்திகளாகும் என்றார்.

- Uthayan