விமலுடன் மோதல்: கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டு உடன்படிக்கை தாமதம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை வழிநடத்தி வரும் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாக அந்த முன்னணிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் கட்சிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவிருந்த கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடுவதை ஒத்திவைக்க நேரிட்டுள்ளதாக அரச புலனாய்வு சேவை ஜனாதிபதியிடம் அறிக்கையிட்டுள்ளது.

அறிக்கைக்கு அமைய, குறித்த கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்ததாகவும் பின்னர், வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கிங்ஸ்பரி ஹோட்டலில் அதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது குறித்து கலந்துரையாட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க சென்றிருந்த போது இருவருக்கும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதும் விமல் வீரவங்ச அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவர்கள் வீரவங்சவை தொலைபேசியில் தொடர்புக்கொள்ள முயற்சித்தும் முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், மறுநாள் தினேஷ் குணவர்தனவை சந்திக்க பசில் ராஜபக்ச அவிசாவளை சென்றிருந்த போதிலும் சாதகமான பலன் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது தாமதமாகியுள்ளது. எவ்வாறாயினும் பொருத்தமான காலத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.