தீர்வை முன்வைக்காவிடின் போராட்டம் வெடிக்கும்! அரசுக்கு எச்சரிக்கை!

Report Print Samy in அரசியல்

.இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்காது தொடர்ந்து அரசு அசமந்தப் போக்கில் செயற்பட்டு வந்தால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோமென இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

30ஆம் திகதிக்கு முன்னர் (நாளை) தீர்வை முன்வைக்காவிடின் அடுத்து வரும் நாட்களில் போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிடுவோம் என்று குடிவரவு குடியகல்வு சங்கத்தின் தலைவர் அருண கலுகல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இரண்டு தசாப்த காலமாக பிரச்சினைகள் நிலவி வருகின்றன. நாங்கள் இது குறித்து வலியுறுத்தி வந்தும் பொறுப்பானவர்கள் கண்டு கொள்வதில்லை.

உயர்ந்த பதவிகளை வழங்குவதில் ஒரு பொறிமுறையில்லை. முறையான பொறிமுறையொன்று அவசியம். அரசுடன் பல சுற்றுப் பேச்சுகளை முன்னெடுத்ததுடன், கடந்த மே மாதம் ஜனாதிபதிக்கு இது குறித்தும் அறிவித்திருந்தோம்.

சேவை பொறிமுறையொன்றை உருவாக்க அரச சேவை ஆணைக்குழுவும், சம்பள நிர்ணய சபையும் அனுமதி வழங்காதுள்ளது. நாங்கள் ஓய்வுபெறும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.

உடன் இந்த விவகாரங்களுக்குத் தீர்வை முன்வைக்காது அரசு அசமந்தப் போக்கில் செயற்படுமாக இருந்தால் பாரிய போராட்டம் வெடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.