ஜெருசலேம் விவகாரத்தில் அரசின் தலையீடு தேவையற்றது: முன்னாள் கடற்படைத் தளபதி

Report Print Rakesh in அரசியல்

ஜெருசலேம் விவகாரத்தில் அரசின் தலையீடு தேவையற்றதாகும். உள்வீட்டுப் பிரச்சினையே தீர்க்க முடியாதவர்கள் அடுத்த வீட்டுப் பிரச்சினையில் தலையிடுவதாக முன்னாள் கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜெருசலேம் விடயத்தில் காட்டும் அக்கறையை அரசு ஏன் ஜெனிவாவில் காட்டவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அறிவித்துள்ள முடிவுக்கு உலகில் 128 நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இலங்கையும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதுடன், ஐ.நாவில் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராகவே வாக்களித்திருந்தது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

அவசர அவசரமாக ஜெருசலேம் விடயத்தில் அரசு செயற்பட்டுவருகிறது. ஜெருசலேம் விடயத்தில் அக்கறை காட்டும் அரசு ஏன் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாட்டில் அக்கறை காட்டுவதில்லை.

இறுதி யுத்தத்தின்போது 7ஆயிரம் வரையிலான மக்களே உயிரிழந்திருக்கக்கூடும் என்று நெஸ்பி பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், அரசு இந்த விடயத்தைக் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், ஐ.நாவிடம் இது குறித்து எந்தவொரு கருத்தையும் வலியுறுத்தியிருக்கவில்லை.

இராணுவத்தைத் தண்டிக்க முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு துணைப்போகும் வகையிலேயே ஐ.நாவில் அரசு தமது செயற்பாட்டை முன்னெடுத்துவருகிறது.

ஜெருசலேம் விவகாரத்தில் அரசின் அவசர அவசரமான முன்னெடுப்புகள் தேவையற்றதாகும். நமது நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாதவர்கள் சர்வதேச விவகாரங்களில் தலையிட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.