உடைகிறது உதயசூரியன்? அதிருப்தியில் ஆனந்தசங்கரி

Report Print Samaran Samaran in அரசியல்

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஈ.பி.ஆர்.எல்.எப் உருவாக்கிய தேர்தல் கூட்டணி உடையும் தறுவாயில் உள்ளது. உள்ளூராட்சிசபை தேர்தல் முடிந்ததும் இந்த கூட்டு உடைந்துவிடும் என தகவல்கள் வெளியாகின்றன.

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் நடவடிக்கைகளால் தமிழர் விடுதலைக்கூட்டணி மிகுந்த அதிருப்தியில் உள்ளது.

உதயசூரியன் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் கைப்பற்றவே ஈ.பி.ஆர்.எல்.எப் தம்முடன் கூட்டணி வைத்தது என்பதை தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர்.

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை தேர்வுசெய்யும் பொறுப்பை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு எடுத்து கொண்டிருந்தது.

தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் சிபாரிசு செய்யப்பட்ட வேட்பாளர்களை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் த.வி.கூட்டணியினர் மிகுந்த விரக்தியில் உள்ளனர்.

வவுனியா நகரசபைக்கு வேட்பாளர்களை த.வி.கூ சிபாரிசு செய்துள்ளது. எனினும், சிவசக்தி ஆனந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

த.வி.கூ சார்பில் வவுனியாவில் இருந்த நீண்டகால செயற்பாட்டாளர்கள் சிலரையாவது களமிறக்க ஆனந்தசங்கரி விரும்பியிருந்தார். இதற்காக வவுனியாவிற்கு சென்று, சிவசக்தி ஆனந்தனுடன் பேச்சு நடத்தினார்.

இரண்டரை மணித்தியாலம் நடந்த பேச்சில், தமது சார்பில் ஒரு வேட்பாளரையாவது களமிறக்குமாறு விநயமாக ஆனந்தசங்கரி கேட்டிருக்கிறார். ஆனால் சிவசக்தி ஆனந்தன் அதை ஏற்கவில்லை.

இறுதியில், “மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்“ என கூறிவிட்டு ஆனந்தசங்கரி அங்கிருந்து வெளியேறி விட்டார்.

இது தொடர்பாக விசனமடைந்த ஆனந்தசங்கரி, தனக்கு நெருக்கமானவர்களிடம் “எமது சமாதியிலிருந்து தனது சாம்ராஜ்யத்தை உருவாக்க சுரேஷ் பிரேமச்சந்திரன் முயல்கிறார்“ என விசனப்பட்டுள்ளார்.

சுரேஷ் அணியின் நடவடிக்கைகள் இதேவிதமாக தொடர்ந்தால், விரைவில் இதை பகிரங்கமாக பேசவும் ஆனந்தசங்கரி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஜனநாயகமில்லை, தொகுதி பங்கீட்டில் தமிழரசுக்கட்சி ஜனநாயக நெறிமுறையை மீறி செயற்படுகிறதென ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றம்சாட்டி வந்ததமை குறிப்பிடத்தக்கது.