ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை பெரிய மலையை பெயர்த்து எலியை பிடித்தமைக்கு நிகரானது

Report Print Steephen Steephen in அரசியல்

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையானது பெரிய மலையை பெயர்த்து எலியை பிடித்தமைக்கு நிகரானதாகவே கூட்டு எதிர்க்கட்சி காண்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.

பிணை முறிப்பத்திர விற்பனையால் ஏற்பட்டுள்ள 11 ஆயிரத்து 141 மில்லியன் ரூபா நஷ்டத்தை மீண்டும் அறவிட்டுக் கொள்ளப் போவதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும் அந்த நஷ்ட தொகையை கூட்டு எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிணை முறிப்பத்திர விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மேலோட்டமாக கணக்கிட முடியாது என்பதை ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போது கூறினேன்.

மேலும், அன்னளவாக மதிப்பிட்டால், 2000 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அறிக்கை வெளிவரும் போது ஜனாதிபதி வாளை கையில் எடுத்து உடனடியாக கழுத்தை அறுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என மக்களை போல் கூட்டு எதிர்க்கட்சியும் எதிர்பார்க்கின்றது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.