யாருக்கும் இடம்கொடுக்க மாட்டேன்! பதிலளிக்கின்றார் ரவி கருணாநாயக்க

Report Print Shalini in அரசியல்

25 வருடங்களாக நான் அரசியலில் இருக்கின்றேன், எனது நம்பகத்தன்மையை கெடுப்பதற்கு யாருக்கும் இடம்கொடுக்க மாட்டேன் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறப்பு அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி, குற்றவாளிகளை தண்டிக்க தாம் பின்னிற்பதில்லை எனவும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் மாத்திரமின்றி போலி சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டும் ஆணைக்குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு எதிராக போலி சாட்சியம் வழங்கிமை தொடர்பில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் விசாரணை ஆணைக்குழு பரிந்துத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை மத்திய வங்கியும் அரச வங்கிகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத நிலையில், என் மீது பிணை முறிப்பத்திர விவகார ஆணைக்குழு எப்படி ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது என்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை.

ஆணைக்குழுவின் அறிக்கை எனக்கும் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட பின்னர் விடயங்களை தெளிவுப்படுத்த உள்ளேன்.

நான் 25 வருடங்கள் அரசியலில் இருக்கின்றேன். எனது நற்பெயரை கெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

அந்த முயற்சியை தோற்கடித்து வெற்றி பெற போவதாகவும் நற்பெயரை கெடுக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை” எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செய்திகள் - ஸ்டீபன்