மகிந்தவின் கோட்டைக்குள் இருந்து முதலில் வெளியேறியது நாங்களே! அமைச்சரின் பெருமிதம்

Report Print Ashik in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரும்புக்கோட்டைக்குள் இருந்து தைரியமாக முதன்முதலா நாங்களே வெளியேறியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பலரும் அச்சம்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் உயிரையும் துச்சமென கருதி மகிந்தவின் கோட்டைக்குள் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாம் சிறிய கட்சியாக இருந்த போது, இறைவனை முன்னிறுத்தி மிகவும் தைரியமாக கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம்.

தமிழ்ச் சமூகமும், மலையக சமூகமும், முஸ்லிம் சமூகமும் மகிந்தவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர், அப்போதைய அரசில் அங்கம் வகித்த சிறிய கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தது.

இதன்போது, மிகவும் துணிச்சலுடன் முடிவெடுத்து மைத்திரியை ஆதரிக்க முன்வந்தோம். யுத்தம் முடிவடைந்திருந்த போது, பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள ஒருசில மதகுருமார்கள் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டனர்.

இனவாத மதகுருமாரின் நடவடிக்கைகளை அடக்க முடியாது, அதனை பார்த்துக்கொண்டிருந்த நாட்டுத் தலைவரை, வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் தீர்மானித்தோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.