பிணைமுறி விசாரணை அறிக்கை! ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா?

Report Print Samy in அரசியல்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியினால் 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழு கண்டறிந்திருப்பதாகவும், இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிப்பாக அறிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை இது தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா? என்ற கேள்விகள் இருந்தன.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரே அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஐ.தே.கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களோ இந்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையை வெளியிட்டு ஐதேகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஏனென்றால் இந்த மோசடிக் குற்றச்சாட்டினால் ஐ.தே.கட்சித் தலைவர்களின் தலைகளும் உருளப் போகின்றது.

குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு மாத்திரமன்றி பொய்ச்சாட்சியம் அளித்ததாகவும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்திருக்கிறது.

ஐதேக தலைமைக்கு நெருக்கமான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோர் குற்றமிழைத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த முறையில் தவறு இல்லையென்று ஆணைக்குழு கூறியிருந்தாலும் கோப் கூட்டத்தில் இந்த மோசடி குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போது அர்ஜூன் மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐதேக தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத போதும் நடந்துள்ள மோசடிகளில் அவருக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் அர்ஜூன் மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விவகாரத்தில் அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பியிருப்பார்.

ஆனால் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் இந்த மோசடியுடன் தொடர்புபட்டவராகவே மகிந்த ராஜபக்ச அணி நிச்சயமாக பிரசாரம் செய்யும். ஏற்கனவே அத்தகைய பிரசாரங்களை மகிந்த ஆணி ஆரம்பித்தும் விட்டது.

அதுவும் ஐதேகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க இந்த மோசடி தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார். இது ஐதேகவைப் பொறுத்தவரையில் கடுமையான சோதனையாகவே இருக்கப் போகிறது.

எனினும் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று ஐதேகவின் அமைச்சர் அஜித் பெரேரா கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்கொள்ளப்படவுள்ள சூழல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐதேகவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு முடிவடைந்துள்ள சூழல் இரண்டு கட்சிகளும் கூட்டு அரசியலில் இருந்து கொண்டே முட்டுப்படத் தொடங்கியுள்ள சூழல் என்பனவற்றின் மத்தில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவை நியமித்தமை தொடர்பாக முன்னதாக ஐதேகவின் அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

ஐதேக மீது ஜனாதிபதி பழியுணர்வுடன் செயற்படுகிறார் என்பது போல அவர்களின் கருத்துக்கள் அமைந்திருந்தன். அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவரும் அதற்குக் காட்டமாக பதிலைக் கொடுத்திருந்தார். இது ரணில் – மைத்திரி கூட்டில் விரிசல்கள் விழத் தொடங்கி விட்டன என்பதற்கான அடையாளமாகவும் பார்க்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாகவும் பேசப்பட்டது. ஆனாலும் இவ்வாறான பேச்சுக்கள் எழும்பும் போதெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு முற்றுப்புள்ளி வைத்து வந்திருக்கிறார். தமக்கிடையில் சீரான உறவு இருப்பதாகக் கூறி வந்திருக்கிறார்.

இப்போது ஜனாதிபதியிடம் இருந்து அத்தகைய நெருக்கத்தை உறுதிப்படுத்தும் கருத்துக்கள் வெளியாகவில்லை. எனினும் பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதமர் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்று ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

ஜனாதியைப் பொறுத்தவரையில் தனது நேர்மையை வெளிப்படுத்த வேண்டியதும் தனது தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்ற வேண்டியதுமான சூழலில் இருக்கிறார்.

சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி ஐ.தே.கட்சி தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முனைகிறது என்ற கருத்து அரசியல் மட்டங்களில் மாத்திரமன்றி ஊடகங்களிலும் உள்ளன.

சுதந்திரக் கட்சியிலுள்ள பிளவுகள் அந்தக் கட்சியை பலவீனப்படுத்தி உள்ளது உண்மை. மகிந்த அணி தேசியவாதப் பிரசாரங்களின் மூலம் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முனையும் நிலையில் ஜனாதிபதிக்கு தமது தலைமையிலான கட்சியே பலமானது என்பதை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றியை வெளிப்படுத்தாது போனால் சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் மகிந்தவின் பக்கம் பாயவும் தயங்க மாட்டார்கள் என்பதும் ஜனாதிபதிக்குத் தெரியும். எனவே எப்படியாவது சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.

ஐதேகவுடன் உள்ள உறவுகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை உடனடியாக வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். உள்ளூராட்சித் தேர்தல் வரை இழுத்தடித்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்திருந்தால் அவரது உண்மைத் தன்மையும் நேர்மையும் கேள்விக்குள்ளாகியிருக்கும்.

ஜனாதிபதி தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறார். அதேவேளை இதன்மூலம் உள்ளூராட்சித் தேர்தலின் போது ஐதேகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி சுதந்திரக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தவும் அவர் முயன்றிருக்கிறார்.

தமது தலைமையில் சுதந்திரக் கட்சி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தியையும் அவர் வதாக்காளர்களுக்கு கொண்டு செல்ல முயன்றிருக்கிறார். அந்தவகையில் ஜனாதிபதி ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்த முனைந்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

ஆனாலும் தாம் ஐதேகவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முனையவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இன்னொரு அறிக்கை பற்றியும் ஜனாதிபதி வெளிப்படுத்தி இருக்கிறார்.

மகிந்த ஆட்சிக்காலத்தில் நடந்த 34 பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி அவர அதில் பிரஸ்தாபித்துள்ளார். எனினும் அதன் உள்ளடக்கங்கள் பற்றி எந்தக் கருத்தையும் அவர் வெளியிடவில்லை.

இந்த அறிக்கையில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் மகிந்த அணியில் உள்ளவர்கள் மீது தான் உள்ளன. சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் தற்போது எதிரணியில் இருப்பதால் சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது.

இரண்டு ஆட்சிகளிலும் ஊழல்கள், மோசடிகள் நடந்திருக்கின்றன என்பது இரண்டு ஆணைக்குழுக்களிலும் முடிவாக அமைந்திருக்கிறது. எனினும் முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் ஒப்புக்கொள்ளப்படவில்லை.

இப்போதைய அரசாங்கம் தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது தவறுகள் என்று கண்டறியப்பட்ட விடயங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருக்கிறது என்பது பொதுமக்களைப் பொறுத்தவரையில் ஆறுதலான விடயமே.

மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் 2008ம் ஆண்டில் இருந்தே இத்தகைய மோசடிகள் நடந்து வந்திருப்பதாகவும் ஆணைக்குழு கூறியிருக்கும் நிலையில் இதுபற்றிய நீண்ட விசாரணைகள் நடத்த வேண்டியிருக்கும்.

குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காலமும் தேவைப்படும். இப்போதைய நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அரசாங்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிடினும் கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா என்பதை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.

எலி கொழுத்தால் வளையில் தங்காது என்பது போல உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி வெறந்றி பெற்றால் நிச்சயம் ஐதேகவுடனான கூட்டை முறித்துக்கொள்ள முனையும். அத்தகைய கட்டத்தில் ஐதேக தனித்து ஆட்சியமைக்க முனையலாம். அது கைகூடுமா என்பது பின்னரே தெரியவரும்.

அதேவேளை சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று மகிந்த ஆணி பலவீனமாக இருப்பது தெரியவந்தால் அங்குள்ளவர்கள் அணி தாவுவார்கள். அதுபோலவே மகிந்த அணி வெற்றி பெற்றால் சுதந்திரக் கட்சி கலகலத்துப் போகும்.

இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடுபறக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஆணைக்குழு அறிக்கை அரசியலில் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

- சத்ரியன்